தமிழ்நாடு

'கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன'- முதல்வர் ஸ்டாலின்

விஜய் பிரசார கூட்டத்தில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

'கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன'- முதல்வர் ஸ்டாலின்
CM Stalin
கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிப்பதாகவும் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்துகொண்ட மக்கள் சந்திப்புப் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கடுமையான நெரிசல் காரணமாக, சிறுவர்கள், பெண்கள் உட்படப் பலர் மயக்கமடைந்தனர். இதில், 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனையில் பலர் அனுமதி

பிரசாரக் கூட்டத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் இந்த நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடனடி நிவாரணப் பணிக்கு முதல்வர் உத்தரவு

இந்தச் சம்பவம் குறித்து அறிந்துகொண்ட தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உடனடியாக மீட்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது 'எக்ஸ்' பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

"கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் சுப்ரமணியன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரைத் தொடர்பு கொண்டு அறிவுறுத்தியுள்ளேன்.

அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அன்பில் மகேஷிடம் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன். அங்கு, விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள ADGP-யிடமும் பேசியிருக்கிறேன். பொதுமக்கள் மருத்துவர்களுக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.