சென்னை போக்குவரத்து காவல்துறையில் வடக்கு மண்டல இணை ஆணையராக பணியாற்றி வந்த மகேஷ் குமார் மீது பெண் காவலர் ஒருவர் பாலியல் புகார் ஒன்றை டிஜிபி சங்கர் ஜிவாலிடம் கொடுத்துள்ளார். சமூக வலைதளம் மூலம் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாவும், பரிசு பொருட்கள் கொடுத்ததாகவும் கூறி புகார் அளித்ததாக தெரிகிறது.
அந்த ஆதாரங்களோடு பாதிக்கப்பட்ட பெண் காவலர் அளித்த புகார், விசாகா கமிட்டிக்கு அனுப்பப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாகா கமிட்டியில் இடம் பெற்றுள்ள டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, சென்னை போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் மகேஷ் குமார் மேலும் ஒரு பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
பணிபுரியும் இடத்திற்கு சென்று பெண் காவலர்களுக்கு சென்னை போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் மகேஷ்குமார் பாலியல் ரீதியில் தொந்தரவு செய்ததாகவும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பெண் காவலர்கள் இரண்டு பேருக்கும் தொடர்ந்து இரவுப்பணி கொடுத்துடன் பணிபுரியும் இடத்திற்கு சென்று மகேஷ்குமார் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மகேஷ் குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். மேலும் அவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ள டிஜிபி சங்கர் ஜிவால், மாநில உள்துறைக்கு பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் மகேஷ் குமாரை சஸ்பெண்டு செய்து மாநில உள்துறை உத்தரவிட்டது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் அதிகாரிகளின் அலுவலகம் மற்றும் முகாம் அலுவலகத்தில் பெண் போலீசாரை பணியில் அமர்த்தக்கூடாது என வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது, எஸ்பிகளில் இருந்து ஐஜி வரை உள்ள காவல் அதிகாரிகளின் அலுவலகம் மற்றும் முகாம் அலுவலகங்களில் பெண் போலீசாரை பணியில் அமர்த்தக் கூடாது என்றும் தற்போது பெண் போலீசார் பணியில் இருந்தால் அவர்களை உடனடியாக வேறு பணிக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கண்காணிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணை ஆணையர் மகேஷ்குமார் பாலியல் விவகாரம் தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அனைத்து நிலை காவல்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.