தமிழ்நாடு

தந்தையை இழந்த பெண்ணுக்கு தாயாக மாறிய போலீசார்.. நெகிழ்ச்சி சம்பவம்!

கொரோனாவால் தந்தையை இழந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு, காவல் நிலையத்தில் போலீசார் வளைகாப்பு நடத்தியது சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தையை இழந்த பெண்ணுக்கு தாயாக மாறிய போலீசார்.. நெகிழ்ச்சி சம்பவம்!
Baby shower for woman at police station
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் சந்தை அருகே உள்ள இரணியல் காவல் நிலையத்தில், கொரோனாவால் தந்தையை இழந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு போலீசார் வளைகாப்பு நடத்தி, பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

திக்கணங்கோடு அருகே மத்திகோடு பகுதியைச் சேர்ந்த சாஜிகுமார், நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கு பூஜா (26) என்ற மகள் இருக்கிறார். சாஜிகுமார் கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனாவால் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, அவரது மகளுக்கு கருணை அடிப்படையில் இரணியல் காவல் நிலையத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணி வழங்கப்பட்டது.

இதனிடையே, பூஜாவுக்கு குமாரபுரத்தைச் சேர்ந்த அனந்தராம் என்பவருடன் திருமணமும் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின்னரும் பூஜா தொடர்ந்து பணிக்குச் சென்று வருகிறார். இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான பூஜாவுக்கு, அவர் பணிபுரியும் இரணியல் காவல் நிலையத்திலேயே வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த அங்கு பணிபுரியும் காவலர்கள் திட்டமிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, காவல் நிலையம் முழுவதும் பலூன்கள் மற்றும் வண்ணக் காகிதங்களால் அலங்கரிக்கப்பட்டது. பூஜாவை நாற்காலியில் அமர வைத்து, அவரது கன்னத்தில் சந்தனம், குங்குமம் தடவி ஆரத்தி எடுத்து, இரணியல் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் வேல்குமார் தலைமையில் காவலர்கள் வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினார்கள். மேலும், பூஜாவுக்கு வளையல்கள், பழங்கள், இனிப்புகள், பல வகையான பலகாரங்களை தட்டுகளில் வைத்து கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கொரோனாவால் தந்தையை இழந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு காவல் நிலையத்தில் வைத்து வளைகாப்பு நிகழ்ச்சி நடத்திய இரணியல் காவல் நிலைய போலீசாரின் செயல் பாராட்டுகளை பெற்று வருகிறது.