தமிழ்நாடு

மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் மூடல்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து தேர்தல் ஆணையம் மற்றும் கலால்துறை உத்தரவிட்டுள்ளது.

மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் மூடல்!
Tasmac
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து தேர்தல் ஆணையம் மற்றும் கலால்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மது விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23 மற்றும் அதற்கு முந்தைய இரு நாட்களான ஏப்ரல் 21, 22 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும். அதேபோல், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4-ஆம் தேதியும் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கடுமையான கட்டுப்பாடுகள்

இந்த நான்கு நாட்களிலும் அரசு மதுபானக் கடைகள் மட்டுமின்றி, தனியார் பார்கள், நட்சத்திர விடுதிகள் என எங்கும் மது விற்பனை செய்யக் கூடாது எனத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. விற்பனை மட்டுமல்லாது, மதுபானங்களைத் தயாரிப்பது மற்றும் வாகனங்களில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்வது போன்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் தடை

தமிழகத் தேர்தலையொட்டி அண்டை மாநிலமான புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஏப்ரல் 21 முதல் 23-ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மதுக் கடைகளை மூடத் துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தின் எல்லைப் பகுதிகளில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்கவும், தேர்தல் நேர்மையாக நடப்பதற்கு ஒத்துழைப்பு நல்கவும் இந்த "மதுவிலக்கு நாட்கள்" அமல்படுத்தப்படுவதாகக் கலால்துறை துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.