தமிழ்நாடு

தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு வேகமாக முன்னேறி வருகிறது- முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் வேகமாக முன்னேறி வருகிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு வேகமாக முன்னேறி வருகிறது- முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
CM Stalin
தமிழ்நாட்டுக்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஒரு வார பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜெர்மனியின் கொலோன் நகரில் நடைபெற்ற 'மாபெரும் தமிழ்க் கனவு' நிகழ்ச்சியில் இன்று உரையாற்றினார்.

"பல்லாயிரம் கிலோமீட்டர்களுக்கு அப்பால் உள்ள தமிழ் பாசம்"

அப்போது அவர், "ஜெர்மனியில் உங்களின் ஆரவாரத்தைக் கேட்கும்போது, நொடியில் தமிழ்நாட்டில் பயணம் செய்த உணர்வு ஏற்படுகிறது. பல்லாயிரம் கிலோ மீட்டர்களைக் கடந்து வேறொரு நாட்டில் நீங்களும், நானும் சந்திக்கின்ற இந்த மகிழ்ச்சிதான் உண்மையான தமிழ்ப் பாசம். உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும் தமிழன் இருப்பான் என்று சொல்வதுதான் நம்முடைய இனத்திற்கான மிகப் பெரிய பெருமை. நில எல்லைகளும், கடல் எல்லைகளும் நம்மைப் பிரித்தாலும், மொழியும், இனமும் நம்மை இணைக்கிறது. கண்டங்களைக் கடந்துவிட்டாலும், நம்முடைய தொப்புள் கொடி அறுந்துவிடவில்லை" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மேலும், "நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதிப்புமிக்க நிலையில் இருப்பதை பார்க்கும்போது, தமிழ்நாட்டின் முதலமைச்சராக, திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவனாக நான் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்" என்றார்.

முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டுப் பயணம்

மேலும், “தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்நாடு எல்லா வகையிலும் முன்னேறி வருகிறது. குறிப்பாக, தொழில் வளர்ச்சியில் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சியை இன்னும் விரைவுப்படுத்தவே, வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு முதலீடுகளை ஈர்த்து வருகிறேன். ஏற்கெனவே ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், ஸ்பெயின், சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு ஏராளமான முதலீடுகளைத் தமிழ்நாட்டை நோக்கி ஈர்த்து, நம்முடைய மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம்” என்றார்.

அயலகத் தமிழர்களுக்காகப் பல்வேறு திட்டங்கள்

வெளிநாடுகளுக்கு வரும்போது, அங்கு வாழுகின்ற தமிழர்களின் வாழ்க்கைத்தரத்தை அறிந்துகொள்ள ஆசைப்படுவதாகத் தெரிவித்த முதலமைச்சர், அயலகத் தமிழர்களின் நல்வாழ்வுக்காகத் தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகக் கூறினார்.

“இந்த ஆண்டு 'அயலகத் தமிழர் நாள் விழாவுக்கு' 62 நாடுகளில் இருந்து தமிழர்கள் சென்னைக்கு வந்திருந்தனர். அயலகத் தமிழர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. அயலகத் தமிழர்களுக்கான டோல்-ஃப்ரீ ஹெல்ப்லைன், புலம்பெயர் தமிழர் அமைப்புகளுக்குச் சுழல் நிதி எனப் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்று உயிரிழப்பவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவியும், பென்ஷனும் வழங்கப்படுகிறது” என்றார்.

"தாய் மண்ணுக்கு உதவுங்கள்"

“தமிழ்நாடு வளர வேண்டும் என நீங்கள் நினைப்பீர்கள். எனவே, உங்களால் முடிந்த உதவிகளைத் தொடர்ந்து உங்கள் தாய் மண்ணுக்குச் செய்யுங்கள். நீங்கள் சிறியதாக தொழில் செய்தாலும், அதனைத் தமிழ்நாட்டிலும் தொடங்க முயற்சி செய்ய வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டுக்கு வாருங்கள், தமிழ்நாடு அடைந்துள்ள மாற்றங்களைக் காண வாருங்கள். தமிழர் தொன்மையின் பண்பாட்டுச் சின்னங்களை உங்கள் குழந்தைகளுக்குக் காட்டவும் வாருங்கள். தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மாணவர்களின் கல்விக்கு உங்களால் இயன்றதைச் செய்யுங்கள். முதலீட்டாளர்களை அழைத்து வாருங்கள்” என்று அவர் கூறினார்.