தமிழ்நாடு

கோயில் திருவிழாவில் தேர் சாய்ந்து விபத்து- உயிர் தப்பிய பக்தர்கள்

பெரம்பலூர் அருகே புகழ்பெற்ற அய்யனார் கோவில் தேர் திருவிழாவின்போது அச்சு முறிந்து தேர் சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிலும் சாய்ந்த தேர் மற்றொரு தேர்மீது விழுந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக வடமிழுத்த பக்தர்கள் உயிர் தப்பினர்.

கோயில் திருவிழாவில் தேர் சாய்ந்து விபத்து- உயிர் தப்பிய பக்தர்கள்
Temple Chariot Topples During Festival in Perambalur
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுக்காவிற்குட்பட்ட கோவில்பாளையம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அய்யனார் கோவிலின் திருத்தேர் திருவிழா இன்று நடைபெற்றது.

இக்கோவிலின் பரிவார தெய்வங்களாக உள்ள திருமலையப்பர் பழனியாண்டவர் சுவாமி சகடைத் தேரிலும், அதனைத் தொடர்ந்து கருப்பசாமி தேரும், மூன்றாவதாக உற்சவ மூர்த்தியான அய்யனார் மற்றும் மாரியம்மன், செல்லியம்மன் சுவாமி ஒரு தேரிலும் என, இரண்டு பெரிய தேர்களும், ஒரு சகடைத் தேரும் ஆண்டுத்தோறும் பவனிவருவது வழக்கம்.

இந்த ஆண்டும் அதேப்போல மூன்று தேர்களும் வடமிழுப்பதற்காக, கிராமத்தில் உள்ள தேர் நிலைநிறுத்தப்படும் இடமான பெருமாள் கோவில் முன்பாக வண்ண மலர்களினால் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இத்தேர் திருவிழாவில் குன்னம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழக போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சருமான சிவசங்கர் கலந்துகொண்டு, ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் சேர்ந்து வடமிழுத்தார்.

அய்யனார் தேரை வடமிழுக்கும் போது தேர் அச்சு முறிந்து கருப்பசாமி தேர்மீது சாய்ந்தது. இந்த தேர் விபத்தில், அதிர்ஷ்டவசமாக தேரின் மேற்பகுதி கீழே இருந்த பக்தர்கள் மீது விழாமல் தடுக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஆதர்ஷ்பசேரா, பாதுகாப்பு காவலர்களைக் கொண்டு தேரின் அருகில் இருந்த பக்தர்களை அப்புறப்படுத்தி பொதுமக்களைச் சூழ்ந்து பாதுகாப்பு வளையம் அமைத்தனர்.

விபத்தினைத் தொடர்ந்து அமைச்சர் சிவசங்கர் முன்னிலையில், ஜேசிபி வாகனத்தைக் கொண்டு மூன்று மணிநேர போராட்டத்திற்குப் பிறகு, அச்சு முறிந்த தேரில் இருந்த அய்யனார், செல்லியம்மன், மாரியம்மன் உள்ளிட்ட உற்சவ மூர்த்தி சிலைகளை மற்றொரு சகடைத் தேருக்கு மாற்றினர்.

அதன்பின் வண்ண மலர்களால் சுவாமி சிலைகள் அலங்கரிக்கப்பட்டு, தேரினை பக்தர்கள் வடமிழுத்து வழிபட்டனர். அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற தேர் திருவிழாவில் தேரின் அச்சு முறிந்து ஏற்பட்ட விபத்து பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.