தமிழ்நாடு

குறை கூறுபவர்கள் மனசாட்சியுடன் பதிலளிக்க வேண்டும்- அமைச்சர் மனோ தங்கராஜ்

இந்திய துணைக்கண்டத்தில் மக்களுக்கு சேவையாற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ போன்ற சிறந்த திட்டம் ஏதாவது மாநிலத்தில் உள்ளதா என அரசை குறை கூறுபவர்கள் மனசாட்சியுடன் பதிலளிக்க வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

 குறை கூறுபவர்கள் மனசாட்சியுடன் பதிலளிக்க வேண்டும்- அமைச்சர் மனோ தங்கராஜ்
அமைச்சர் மனோ தங்கராஜ்
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தமிழகத்தில் இன்று கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார். அதே நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பேரூராட்சிக்குட்பட்ட திருநந்திக்கரை பகுதியில் இந்த திட்டத்தை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ஆட்சியர் அழகு மீனா தலைமையில் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து உரையாற்றினார்.


341 முகாம்கள் நடத்த திட்டம்

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தியாவிலே முதல் முதலாக உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை துவக்கி வைத்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் இந்த முகாம்கள் நடைபெற உள்ளது. இந்தத் திட்டத்தில் 7 லட்சத்து 14 ஆயிரத்து 972 வீடுகளில் தன்னார்வலர்கள் சென்று அங்கு வசிப்பவர்களுக்கு அரசின் திட்டங்கள் ஏதாவது கிடைக்க வேண்டி உள்ளதா என்பதை கண்டறிந்து அதற்கான மனுக்களை தயாரித்து ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரு தொகுதிக்கு ஒரு இடம் அந்த வகையில் அவர்களிடம் மனுக்களை பெறப்படும் பணி இன்று நடைபெறுகிறது.


நமது மாவட்டத்தில் 341 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.அதில் முதல் கட்டமாக 116 இடங்கள் திட்டமிடப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் அடுத்த கட்டமாக நடைபெறுகிறது. 41 இடங்கள் என மொத்தம் நான்கு கட்டங்களாக முடிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.

முதல்வருக்கு நன்றி


நமது மாவட்டத்தை பொருத்தவரை கிராமப் பகுதிகள் 165 நகரப்புற பகுதிகள் 176ம் பயன்பட இருக்கின்றது. கிராமப்புற பகுதிகளில் 16 துறைகள் மூலம் 46 சேவைகளும் நகரப் பகுதிகளில்13 துறைகள் மூலம் 43 சேவைகளும் வழங்க உள்ளோம். இந்த திட்டத்தின் மூலம் ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகை பெற தகுதி உள்ளவர்கள் யாராவது விடுபட்டிருந்தால் அவர்களுக்கும் அந்த நிதி வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

தமிழக அரசின் மீது குறை கூறுபவர்கள் நியாயமாக மனசாட்சிபடி இந்திய துணைக்கண்டத்தில் இதுபோன்று ஒரு திட்டம் உண்டா, இதுபோன்ற நல்ல திட்டத்தை வேறு ஏது மாநிலத்தில் உள்ளதா? என்று கூற வேண்டும். அற்புதமான இந்த திட்டத்தைத் தந்த முதல்வருக்கு என்னுடைய நன்றியை வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்தார்