தமிழ்நாடு

திருப்பதி லட்டு நெய் கலப்பட விவகாரம்: திண்டுக்கல் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு ரத்து!

திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் சப்ளை செய்த விவகாரத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த நிறுவனத்தின் உரிமத்தை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

திருப்பதி லட்டு நெய் கலப்பட விவகாரம்: திண்டுக்கல் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு ரத்து!
திண்டுக்கல் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு ரத்து!
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாதமான லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனத்தின் உரிமத்தை நிறுத்தி வைத்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து ஏ ஆர் டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் விசாரணைக்கு வந்த போது, நெய் மட்டுமல்லாமல் அனைத்து பால் பொருட்கள் உற்பத்திக்கான உரிமத்தை நிறுத்தி வைத்ததன் மூலம் நிறுவனம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனத்தின் தரப்பில் வாதிடப்பட்டது.

மதுரை அமர்வில் இந்த வழக்கின் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி வி.லட்சுமி நாராயணன் இன்று தீர்ப்பளித்தார். ஏ. ஆர். டெய்ரி புட்ஸ் நிறுவனத்தின் உணவு பாதுகாப்பு மற்றும் தரம் நிர்ணய உரிமத்தை நிறுத்தி வைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த விவகாரம் குறித்து மறு பரிசீலனை செய்யும் படி உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய உரிமம் வழங்கும் அதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மறுபரிசீலனை செய்யும் வரை, நெய் உற்பத்திக்கான உரிமம் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கருத வேண்டும் எனவும், உரிமம் நிறுத்தி வைத்த உத்தரவு ஆறு வாரங்களுக்கு மட்டுமே நடைமுறையில் இருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

நெய் உற்பத்திக்கான உரிமத்தை மட்டும் நிறுத்தி வைப்பதா, அல்லது அனைத்து பால் பொருட்களுக்குமான உரிமத்தை நிறுத்தி வைப்பதா என்று உரிமம் வழங்கும் அதிகாரி பரிசீலிக்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்படமான நெய்யை விநியோகித்ததாக உணவு பாதுகாப்பு துறை உரிமம் வழங்கும் அதிகாரி முடிவுக்கு வந்து, நிறுவனத்தின் அனைத்து பால் பொருட்களையும் நிரந்தரமாக தடை செய்ய விரும்பினால் சட்டத்திற்கு உட்பட்டு உரிமத்தை ரத்து செய்யலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்