தமிழ்நாடு

கழிவறையினை சுத்தம் செய்யும் மாணவர்கள்.. வைரலாகும் வீடியோ: ஆசிரியை விளக்கம்

திருமயம் அருகே அரசு பள்ளி மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்ததாகப் புகார் எழுந்துள்ள நிலையில் அதுத்தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து பள்ளியின் தலைமையாசிரியர் விளக்கம் அளித்துள்ளார்.

கழிவறையினை சுத்தம் செய்யும் மாணவர்கள்.. வைரலாகும் வீடியோ: ஆசிரியை விளக்கம்
Video of Students Cleaning School Toilet Near Thirumayam Goes Viral
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகேயுள்ள தேக்காட்டூர் ஊராட்சிக்குட்பட்ட நமணசமுத்திரம் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், மாணவர்களைப் பள்ளி கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்ததாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நமணசமுத்திரம் குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை சுமார் 30 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் கலா என்பவர் கடந்த 18 ஆண்டுகளாக தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். தினேஷ் ராஜா என்பவர் 11 ஆண்டுகளாக உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

கடந்த ஜூலை 10ம் தேதி, தலைமை ஆசிரியை கலா பள்ளியில் பயிலும் மாணவர்களைப் பள்ளி கழிவறையைச் சுத்தம் செய்ய வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

தலைமை ஆசிரியை விளக்கம்:

இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியை கலாவிடம் கேட்டபோது, தான் மாணவர்களை கழிவறையினை சுத்தம் செய்ய நிர்பந்திக்கவில்லை என்றும், என் மீது அவப்பெயரை உண்டாக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் இது நடைப்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தலைமை ஆசிரியை கூறுகையில், “பள்ளி கழிவறைகளைச் சுத்தம் செய்ய நமணசமுத்திரம் குடியிருப்பைச் சேர்ந்த ராணி என்பவர் தனியாக நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த மூன்று ஆண்டுகளாக ராணி பணியாற்றி வருகிறார். நமணச்சமுத்திரம் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த வீரம்மாள் மற்றும் குறிச்சிபட்டியைச் சேர்ந்த சுதா ஆகிய இருவரும் காலை உணவுத் திட்டத்தின் கீழ் சமையல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வீரம்மாள், சுதாவை காலை உணவு சமையல் செய்ய வர வேண்டாம் என்று கூறியுள்ளார். என்னிடம் கேட்காமல் அவரை வேலைக்கு வர வேண்டாம் என்று ஏன் கூறினீர்கள்? என்று நான் கேள்வி எழுப்பியிருந்தேன். இந்தக் காரணத்திற்காக, கழிவறை சுத்தம் செய்ய வரும் ராணி என்ற பெண் பள்ளிக்கு வருவதற்கு முன்பாகவே, வீரம்மாள் வேண்டுமென்றே தனது மகன் மற்றும் மற்றொரு மாணவரையும் சேர்த்து கழிவறையை சுத்தம் செய்ய வைத்துள்ளார். அதை வீடியோவாகப் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார்” என்று தலைமை ஆசிரியை கலா தெரிவித்துள்ளார்.

வைரலாகும் வீடியோ குறித்து தலைமை ஆசிரியை கலா விளக்கம் தெரிவித்துள்ள நிலையில், இதுத்தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.