தொழில்நுட்பம்

பட்டையை கிளப்பும் iOS 26.. செம குஷியில் ஐபோன் பயனர்கள்

சமீபத்தில் பீட்டா பயனர்களுக்காக வெளியிடப்பட்ட iOS 26 ஆப்ரேட்டிங் சிஸ்டம், ஐபோன் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. அதில் கவனம் ஈர்த்த சில விஷயங்கள் உங்கள் பார்வைக்காக

பட்டையை கிளப்பும் iOS 26.. செம குஷியில் ஐபோன் பயனர்கள்
iOS 26 Unveiled new features for apple iPhones
ஆப்பிள் நிறுவனம் தனது வருடாந்திர டெவலப்பர்கள் மாநாடான WWDC 2025-ல், ஐபோன்களுக்கான அடுத்த தலைமுறை ஆப்ரேட்டிங் சிஸ்டமான iOS 26-ஐ அறிமுகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து iOS 26-ன் டெவலப்பர் பீட்டா ஜூன் 9, 2025 அன்று வெளியிடப்பட்டது. இதனை தற்போது ஒரு சில பயனர்கள் பயன்படுத்தி வரும் நிலையில், iOS 26-ல் இடம்பெற்றுள்ள சில முக்கிய அப்டேட்கள் மற்றும் புதிய வசதிகள் பயனர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன.

iOS 26 அனைத்து பயனர்களுக்கும் வருகிற செப்டம்பர் மாதத்தில், ஐபோன் 17 தொடருடன் இணைந்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அட்டகாசமான சில புதிய வசதிகளை இப்பகுதியில் காண்போம்.

Liquid Glass வடிவமைப்பு:

iOS 26 உடன், ஆப்பிள் ஒரு புதிய பயனர் இடைமுக வடிவமைப்பு (user interface) அம்சமான "லிக்விட் கிளாஸ்" (Liquid Glass) -ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சம் உங்கள் போனின் ஸ்கீரினை பார்ப்பதற்கு கண்ணாடியினை பார்ப்பது போல் காட்சியளிக்கும். உதாரணத்திற்கு, உங்கள் ஸ்கீரினில் உள்ள நோட்டீபிகேஷனை நீங்கள் தள்ளும் போது, ஏதோ ஒரு கண்ணாடி பலகையினை கைகளால் நகர்த்துவது போல உணர்வீர்கள்.

மெனுக்களை தொடும் போது, தண்ணீரை விரலால் தொடுவது போல் உணர்வீர்கள். அப்போது மெனுக்களை சுற்றி வளையமும் விரியும். இந்த ஆப்ஷன் பலரது பாராட்டினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Image

ஸ்பேம் அழைப்புகளுக்கு பதில்:

தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வரும்பட்சத்தில், உங்கள் ஐபோன் தானாகவே பதிலளிக்கும். தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், தெரியாத நபர் ஒருவர் அழைக்கும் போது.. அவர் யார்? ஏன் அழைக்கிறார் ? என்பதை அவரே உள்ளீட கோரும். உங்கள் மொபைல் போன், உங்களுக்கு ஒலிப்பதற்கு முன்னால் அழைப்பாளர் உள்ளீட்ட பதில் உங்கள் திரையில் தோன்றும். நீங்கள் அதனைப் பார்த்து, வேண்டிய அழைப்பாக இருந்தால் பதிலளிக்கலாம். இல்லையென்றால் புறக்கணிக்கலாம்.

Image

உடனடி மொழிபெயர்ப்பு:

நீங்கள் டைப் செய்யும் போதே உரைகள் தானாகவே உங்களுக்கு விருப்பமான மொழியில் மொழி பெயர்க்கப்படும். Facetime அழைப்புகளின் போதும், திரையில் எதிரே பேசுபவர்களின் வார்த்தைகளை மொழி பெயர்த்து உங்களுக்கு வழங்கும். இந்த வசதி ஆண்ட்ராய்டு தொலை பேசிகளை பயன்படுத்துபவர்களுடனும் வேலை செய்கிறது. ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரெஞ்சு, ஜெர்மன் உட்பட பல மொழிகள் இந்த மொழி பெயர்ப்பு ஆப்ஷனில் இடம் பெற்றுள்ளன.

Image

ஆப்பிள் மியூசிக்: ஆட்டோ மிக்ஸ், பாடல் மொழிபெயர்ப்பு

iOS 26-ல் இசை பிரியர்களுக்கு அட்டகாசமான 2 ஆப்ஷன்கள் இடம்பெற்றுள்ளன. ஒன்று ஆட்டோமிக்ஸ், மற்றொன்று மொழி பெயர்ப்பு. ஆட்டோமிக்ஸ் கிட்டத்தட்ட ஒரு டிஜே போல உங்களுக்கு விருப்பமான பாடல்களை கலந்துக்கட்டி வழங்க AI தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு புதிய ஆப்ஷனை வழங்கியுள்ளது. நீங்கள் வெளிநாடு மொழிகளில் பாடல்களை கேட்பவராக இருப்பின், iOS 26-ல் பாடலை நேரடியாக மொழி பெயர்ப்பு (ஆங்கிலத்தில்) செய்யலாம். இதன் மூலம், உங்களுக்கு புரியாத பாடல் வரிகளின் உண்மையான அர்த்தத்தினை இனி நீங்கள் தெரிந்துக் கொள்ள முடியும்.

Image

மெசேஞ்சர்:

ஆப்பிள் மெசேஞ்சரில் இரண்டு புதிய அம்சங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒன்று, குழு அரட்டையில் (Group message) கருத்துகணிப்பு வசதி (poll option) கொண்டு வரப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, இன்று எந்த சினிமாவிற்கு போகலாம்? என உங்கள் குழுவில் விவாதிக்க வேண்டியிருந்தால் எளிமையாக ஒரு போலினை உருவாக்கி முடிவெடுக்கலாம். இரண்டாவதாக, உங்களது சொந்த புகைப்படங்களை தனிப்பயனர்களின் உரையாடலில் வால்பேப்பராக பயன்படுத்தலாம்.

கூகுள் மேப் டிராக்கிங், விளையாட்டுகளுக்கான ஒரு ஹப், விஷூவல் செயற்கை நுண்ணறிவு உட்பட இன்னும் பல்வேறு அம்சங்கள் iOS 26-ல் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.