தொழில்நுட்பம்

வரி மட்டும் ரூ.29 லட்சமா? டெஸ்லா கார் வாங்க நினைத்தவர்கள் அதிருப்தி

இந்தியாவில் புதிதாக திறந்துள்ள டெஸ்லா ஷோரூமில், டெஸ்லா மாடல் Y காருக்கு கிட்டத்தட்ட ரூ.29 லட்சம் வரி விதிக்கப்படுவதாக நெட்டிசன் ஒருவர் சமூக வலைத்தளத்தில் புலம்ப, அந்த பதிவு வைரலாகியுள்ளது.

வரி மட்டும் ரூ.29 லட்சமா? டெஸ்லா கார் வாங்க நினைத்தவர்கள் அதிருப்தி
Tesla Model Y price range in india
எலெக்ட்ரிக் கார் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக திகழும் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது முதல் ஷோரூமை மும்பையின் பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸில் (BKC) சில தினங்களுக்கு முன்பு திறந்தது. டெஸ்லா மாடல் Y கார்களுக்கு தற்போது முன்பதிவு நடைப்பெற்று வருகிறது.

முன்பதிவு செய்பவர்களுக்கு நடப்பாண்டின் மூன்றாம் காலாண்டில் ( செப்- டிசம்பர்) கார் டெலிவரி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் காரின் விலைத் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.

அமெரிக்காவில் கார் விலை என்ன?

இந்தியாவில் தற்போது விற்பனைக்கு வந்துள்ள டெஸ்லா மாடல் Y காரின் விலை சுமார் ரூ.61 லட்சம் (எக்ஸ்- ஷோரூம்). ஆனால் இதே மாடல் காரின் விலை அமெரிக்காவில் $37,490 மட்டுமே. அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.32 லட்சத்திற்கு விற்கப்படுகிறது.

அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் காரின் விலை இரட்டிப்பாக உள்ளது என சமூக வலைத்தளங்களில் பலர் தங்கள் அதிருப்தியினை வெளிப்படுத்தியுள்ளனர். ஒரு நபர் தனது பதிவில், "இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டெஸ்லா மாடல் Y காரினை வாங்க திட்டமிட்டு இருந்தால், நீங்கள் அரசாங்கத்திற்கு அதன் உண்மையான விலையுடன் கூடுதலாக ரூ.29 லட்சம் கொடுக்க வேண்டும். ரூ.32 லட்சம் மதிப்பிலான காருக்கு ரூ.29 லட்சம் வரியா? இந்தியாவின் வளர்ச்சிக்கு நீங்கள் அளிக்கும் பங்களிப்புக்கு நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.



டெஸ்லா இந்தியாவின் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ள தகவலின் படி, டெஸ்லாவின் மாடல் Y மட்டுமே தற்போது இரண்டு வகைகளில் கிடைக்கிறது. ஒன்று நிலையான ரியர்-வீல் டிரைவ், இதன் விலை சுமார் ரூ.61.07 லட்சம். மற்றொன்று லாங் ரேஞ்ச் ரியர்-வீல் டிரைவ், இதன் விலை ரூ.69.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).

ஏன் கார் விலை இவ்வளவு கூடுதல்?

டெஸ்லா நிறுவனம் தனது ஷோரூமில் முன்பதிவு தொடங்கியுள்ள டெஸ்லா மாடல் Y கார்களானது ’completely built units (CBUs)’ என்பார்கள். அதாவது, இந்த காரின் தயாரிப்பு இந்தியாவில் மேற்கொள்ளப்படவில்லை. காரின் அனைத்து பாகங்களும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு மொத்தமாக அசெம்பிளி செய்யப்பட்ட நிலையில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு மொத்தமாக வெளிநாடுகளில் அசெம்பிளி செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனையாகும் பொருட்களுக்கு மத்திய அரசு இறக்குமதி வரியினை அதிகமாக விதித்துள்ளது. ஒரு காரின் CIF (Cost, Insurance, Freight) மதிப்பு 40,000 அமெரிக்க டாலர்களுக்கு மேல் இருந்தால் 100% வரியும், அதற்குக் குறைவாக இருந்தால் 70% வரியும் விதிக்கப்படுகிறது. இதனால், தான் அமெரிக்காவில் விற்பனையாகும் டெஸ்லாவின் காருக்கும், இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள டெஸ்லா காருக்கும் விலையின் அடிப்படையில் இவ்வளவு வித்தியாசம் உள்ளது.

ஏற்கெனவே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ”அமெரிக்க தயாரிப்புகளுக்கு இந்தியா அதிகமாக வரி விதிக்கிறது. இது சரியில்லை. வரியினை குறைக்கவில்லை என்றால் நாங்களும் இந்தியாவிற்கு நிகரான வரியினை விதிப்போம்” என வெளிப்படையாக பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு டெஸ்லா கார் வாங்க வேண்டிய இடத்தில், ஒரு கார் மட்டும் வாங்கி இந்தியாவில் உள்ள குண்டும், குழியுமான சாலைகளில் வாகனம் ஒட்டுவதற்கு காரை வாங்காமலே இருக்கலாம் என ஒரு பயனர் நக்கலாக எக்ஸ் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பயனர் டெஸ்லா தனது உற்பத்தி ஆலையை இந்தியாவில் அமைத்தால் மட்டுமே விலைக் குறைப்பு சாத்தியம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

மும்பையினை தொடர்ந்து, டெல்லி-NCR பகுதியிலும் மற்றொரு ஷோரூமை திறக்க டெஸ்லா திட்டமிட்டுள்ளது. தற்போது, டெஸ்லா மாடல் Y யூனிட்கள் டெஸ்லாவின் ஷாங்காய் தொழிற்சாலையில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.