உலகம்

டெல்டா விமானத்தின் என்ஜினில் ஏற்பட்ட தீ.. லாஸ் ஏஞ்சல்ஸில் பரபரப்பு

லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட டெல்டா விமானத்தின் என்ஜினில் தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டெல்டா விமானத்தின் என்ஜினில் ஏற்பட்ட தீ.. லாஸ் ஏஞ்சல்ஸில் பரபரப்பு
Delta plane engine catches fire
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து அட்லாண்டா நோக்கி நேற்று (ஜூலை 19) புறப்பட்ட டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 767-400 ரக பயணிகள் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அதன் இடது என்ஜினில் தீப்பிடித்ததால், மீண்டும் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்திலேயே அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இந்தச் சம்பவம் விமான நிலையத்திலும், பொதுமக்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விமானி அவசரநிலையை அறிவித்ததைத் தொடர்ந்து, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அறை, விமானம் பாதுகாப்பாக மீண்டும் விமான நிலையத்திற்குத் திரும்ப வழிகாட்டியது. விமானம் தரையிறங்கியதும், தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து என்ஜினில் பற்றிய தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக, இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க விமானப் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பான ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது. விமானத்தின் இடது என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டதற்கான சரியான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், தங்கள் பாதுகாப்பு நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்வதாகவும் கூறியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதமும் ஆர்லாண்டோ பன்னாட்டு விமான நிலையத்தில் மற்றொரு டெல்டா விமானத்தில் இதேபோன்ற ஒரு என்ஜின் தீ விபத்து ஏற்பட்டது. டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் 1213 (ஏர்பஸ் A330), அட்லாண்டாவிற்கு புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தபோது, அதன் எஞ்சின் ராம்ப் பகுதியில் தீப்பிடித்தது. அப்போது விமானத்தில் 282 பயணிகள், 10 விமானப் பணிப்பெண்கள் மற்றும் இரண்டு விமானிகள் இருந்தனர். இந்தச் சம்பவத்திலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.