சினிமா

ஜனநாயகன் ஓடிடி ரிலீஸ்... குஷியில் விஜய் ரசிகர்கள்

முதலமைச்சர் விஜய்யின் கடைசி திரைப்படமாக வெளியான ‘ஜனநாயகன்’ தற்போது ஓடிடி ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. திரையரங்கில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படத்தை வீட்டிலிருந்தே பார்க்க ரசிகர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஜனநாயகன் ஓடிடி ரிலீஸ்... குஷியில் விஜய் ரசிகர்கள்
Jananayagan ott release on august 21st in zee5
முதலமைச்சர் விஜய்யின் கடைசி திரைப்படமாக வெளியான ‘ஜனநாயகன்’ தற்போது ஓடிடி ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. திரையரங்கில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படத்தை வீட்டிலிருந்தே பார்க்க ரசிகர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான ‘ஜனநாயகன்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மமிதா பைஜூ, பிரியாமணி, நரேன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

அரசியலில் முழுமையாக கவனம் செலுத்த முடிவு செய்த விஜய், தனது திரைப்பயணத்திற்கு ‘ஜனநாயகன்’ மூலம் முற்றுப்புள்ளி வைத்தார். இதனால் இப்படம் வெளியாகும் முன்பே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவானது.

பொங்கலுக்கு வெளியிட படக்குழு முடிவு செய்து மும்முரமாக பணிகள் செய்து வந்த நிலையில் தணிக்கை சான்றிதழ் காரணமாக, படம் பொங்கலுக்கு வெளியிடமுடியாமல் போனது. அதுமட்டுமின்றி, தயாரிப்பு நிறுவனம் சார்பில் மத்திய தணிக்கை குழு மீது வழக்குகள் பதியப்பட்டு மாறி மாறி பெரும் பிரச்சனைகள் நிலவி வந்தது.

அதன்பின், தமிழ்நாடு தேர்தல் நேரத்தில் இந்த படம் திரையரங்குகளில் வெளிவர முடியாத நிலையில், சமூக வலைத்தளத்தில் படம் முழுவதும் கசிந்து விஜய் ரசிகர்களுக்கும், தயாரிப்பு நிறுவனத்துக்கும் பேரதிர்ச்சியை கொடுத்தது. படத்தின் படத்தொகுப்பு பிரிவில் இருந்து இந்த படம் கசியப்பட்டது என வெளியான படக்காட்சிகளில் எடிட்டர் வாட்டர்மார்க் இருந்ததன் மூலம் தெரியவந்தது.

இறுதியில், ஜூலை 23ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவானதாக கூறப்பட்ட நிலையில், உலகளவில் ரூ.280 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின. தமிழ்நாட்டில் மட்டும் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது. என்னதான் படம் திரையரங்கில் வெளியாவதற்கு முன்பே சமூக வலைத்தளத்தில் கசிந்தாலும் விஜய் ரசிகர்கள் பலரும் கசிந்த படத்தை பார்க்கமாட்டோம் என்று காத்திருந்து திரையரங்கில் பார்த்ததாக சமூக வலைதலைப்பக்கங்களில் தங்களது ரசிக விசுவாசத்தை காண்பித்தார்கள்.

இந்நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் இப்படத்தை ரசிகர்கள் பார்க்கலாம். இதனை உறுதி செய்யும் வகையில் சிறப்பு வீடியோ ஒன்றினை ஜீ5 ஓடிடி சமூகவலைத்தளத்தில் வெளியிட்டிருந்தது.

திரையரங்கில் தவறவிட்ட விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தை இனி ஓடிடியில் பார்க்கலாம்!