இந்தியா

டெல்லியை தொடர்ந்து பெங்களூருவிலும் N1H1 காய்ச்சல்! தமிழ்நாட்டிற்கு பரவும் அபாயமா?

டெல்லியை தொடர்ந்து பெங்களூருவிலும் உள்ள பள்ளி ஒன்றில் N1H1 காய்ச்சல் பரவலால் 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாதிப்பு. தமிழ்நாட்டிற்கு வரும் அபாயம் இருக்கிறதா என்று மக்கள் அச்சம்.

டெல்லியை தொடர்ந்து பெங்களூருவிலும் N1H1 காய்ச்சல்! தமிழ்நாட்டிற்கு பரவும் அபாயமா?
N1H1 virus spreads in Banglore
டெல்லியை தொடர்ந்து பெங்களூருவிலும் உள்ள பள்ளி ஒன்றில் N1H1 காய்ச்சல் பரவலால் 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாதிப்பு. தமிழ்நாட்டிற்கு வரும் அபாயம் இருக்கிறதா என்று மக்கள் அச்சம்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் காய்ச்சல், சளி, கடுமையான இருமல் மற்றும் உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகளுடன் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளியில் நேரடி வகுப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

பெங்களூரு ரிச்சர்ட்ஸ் டவுன் பாட்டரி சாலையில் கிளாரன்ஸ் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 2,500 மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக மாணவர்களிடையே காய்ச்சல் மற்றும் இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் வேகமாகப் பரவியுள்ளன.

இதன் காரணமாக 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வராமல் விடுப்பு எடுத்துள்ளனர். மேலும், 21 ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களும் இதேபோன்ற அறிகுறிகளுடன் விடுப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 மாணவர்களுக்கு H1N1 உறுதி:

காய்ச்சல் அறிகுறிகளுடன் 137 மாணவர்கள் பள்ளியின் முதலுதவி மையத்தில் சிகிச்சைக்காக வந்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 2 மாணவர்களுக்கு H1N1 எனப்படும் ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் தொற்று எனப்படும் பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை பள்ளியில் நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

பள்ளியைச் சுற்றியுள்ள சுகாதார சீர்கேடு காரணமா?

மாணவர்களிடையே காய்ச்சல் பரவியதற்கு பள்ளியைச் சுற்றியுள்ள சுகாதாரமற்ற சூழலும் ஒரு காரணமாக இருக்கலாம் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு பள்ளி நிர்வாகம் அவசர கடிதம் அனுப்பியுள்ளது. அதில், பள்ளியைச் சுற்றி அனுமதியின்றி செயல்படும் தெருவோர உணவுக் கடைகள் மற்றும் சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் உணவுப் பொருட்கள் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நடைபாதைகளை ஆக்கிரமித்து செயல்படும் கடைகள், அங்கு கொட்டப்படும் உணவுக் கழிவுகள் மற்றும் அதன் காரணமாக அதிகரிக்கும் எலிகளின் நடமாட்டம் ஆகியவை மாணவர்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் பள்ளி நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, பள்ளி வளாகத்தைச் சுற்றியுள்ள 50 மீட்டர் பகுதிக்குள் சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கவும், சட்டவிரோதமாக செயல்படும் கடைகளை உடனடியாக அகற்றவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் நிலைமையை கண்காணித்து தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், முதலில் டெல்லி இப்போது பெங்களூரு அடுத்ததாக தமிழ்நாட்டிற்கும் பரவும் வாய்ப்புகள் இருக்கிறதா என்ற கேள்விகள் மக்களிடையே எழுந்துள்ள நிலையில், அதற்கான சுகாதார பாதுகாப்புடன் மக்களும், சுகாதாரத்துறையின் முன்னேற்பாடுகள் தயாராக இருப்பதாகவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.