அரசியல்

"பிரிந்து சென்றவர்களை சேர்க்க மறுத்ததால்தான் தொடர் தோல்வி"- இபிஎஸ் மீது சி.வி.சண்முகம் கடும் தாக்கு!

பிரிந்து சென்றவர்களை சேர்க்க மறுத்ததால்தான் அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது என்று எடப்பாடி பழனிசாமி மீது சி.வி. சண்முகம் கடும் குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளார்.


CV Shanmugam and Edappadi Palaniswami
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுக-வில் எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி தரப்பினரிடையே பிளவு தீவிரமடைந்துள்ள சூழலில், "கசப்பை மறந்து ஒன்று கூடுவோம்" என்ற எடப்பாடி பழனிசாமியின் அழைப்பிற்குப் பொதுக்குழுவைக் கூட்டி முடிவெடுக்கலாம் என முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பதில் அளித்துள்ளார்.

நடந்து முடிந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதைத் தொடர்ந்து, சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு ஆதரவளிப்பதில் கட்சிக்குள் இரு அணிகள் உருவாகின. எடப்பாடி பழனிசாமியின் உத்தரவை மீறி 25 எம்.எல்.ஏ.க்கள் தவெக அரசுக்கு ஆதரவளித்ததால், எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் உள்ளிட்ட 26 மாவட்டச் செயலாளர்கள் பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்தார். இன்று சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்த வேலுமணி தரப்பினர், தனியாக ஆலோசனைகளில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக, "நமக்குள்ளான கசப்புகளை மறந்து ஒன்று கூடுவோம்" என எடப்பாடி பழனிசாமி அறிக்கை வாயிலாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான விமர்சனம்

இந்த அறிக்கை குறித்துச் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், "தான் மட்டும் இருந்தால் போதும், தனக்காகத்தான் மக்கள் வாக்களிக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி நினைத்துக் கொண்டிருந்தார். இப்போது தனது பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து வருகிறது என்றவுடன், கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போல ஒன்று கூடுவோம் என அறிக்கை விடுகிறார். ஒருபுறம் பேச அழைப்பு விடுத்துக்கொண்டே, மறுபுறம் நிர்வாகிகளை நீக்கும் வேலையையும் செய்து வருகிறார்" என்று குற்றம் சாட்டினார்.

கூட்டணித் தோல்விகளும் பொதுக்குழு கோரிக்கையும்

தொடர்ந்து பேசிய அவர், "எடப்பாடி பழனிசாமியின் தவறான அணுகுமுறையால்தான் அ.தி.மு.க. தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. வெற்றியும் தோல்வியும் சகஜம் என்பது உண்மைதான். ஆனால் நாம் தோல்வி மட்டும்தானே சந்தித்து வருகிறோம். தோல்வியைக் கூட சந்திச்சிக்கலாம். ஆனால் அதைப் பற்றி விவாதிக்கவே மாட்டேன் என்றால் எப்படி?

தேர்தலுக்கு முன்பாகக் கூட்டணி பேச வந்த தவெக-வை உதாசீனப்படுத்தினார்; கூட்டணி பேச்சுவார்த்தையின் போது தேமுதிக-வை அரை சதவீத கட்சி என ஏளனம் செய்தார். ஓ. பன்னீர்செல்வத்தைக் கட்சியின் உறுப்பினராகக் கூட ஏற்க மறுத்தவர், இப்போது எல்லோரையும் இணைக்கப் பேசுகிறார். முன்பே அனைவரையும் அரவணைத்து வலிமையான கூட்டணி அமைத்திருந்தால் இன்று அவரே தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்திருப்பார். பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார், உடனடியாகப் பொதுக்குழுவைக் கூட்டுங்கள்; அங்கு அனைத்தையும் பேசி முடிவெடுக்கலாம்" என்று அவர் கூறினார்.