அரசியல்

உச்சத்தில் இருக்கும் ஜாதகம்... செயல் தலைவராகும் உதயநிதி?

திமுகவின் செயல் தலைவராக உதயநிதி ஸ்டாலினை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று திமுகவின் இளம் உடன்பிறப்புகள் குரல் கொடுத்து வருவதுதான் அறிவாலயத்தின் ஹாட் டாபிக்.

உச்சத்தில் இருக்கும் ஜாதகம்... செயல் தலைவராகும் உதயநிதி?
சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி, விஜய் என்ற ஒற்றை நபரால் ஏற்பட்டாலும், ஆளுங்கட்சியாக இருந்த திமுக மீதான வெறுப்புணர்வும், தலித்துகளுக்கு எதிரான பிரச்னைகளை தீவிரமாக கையாளததும், வாரிசு அரசியலும், கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பும், அசுர வளர்ச்சி பெற்ற போதைப் பொருள் கலாச்சாரமும் தான் என்பதே களநிலவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

களநிலவம் இப்படி இருக்க, இதனை நன்குணர்ந்துள்ள தவெக, ஒருவேளை நாம் தவறே செய்தாலும், நமக்கான மாற்று சக்தியாக வேறு யாரும் இருந்துவிடக் கூடாது என்பதில் திட்டவட்டமாக இருப்பதாகவும், அதற்கான காய்களைத் தான ஆட்சிப் பொறுபேற்றதில் இருந்து தவெக கனக்கச்சிதமாக செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அதாவது, திமுகவில் சுமார் 1,000 ஒன்றியச் செயலாளர்கள் இருக்கின்றனர். இந்த 1000 ஒன்றியச் செயலாளர்களில், திடீரென 113 பேர் மொத்தமாக தவெக இணைந்துள்ளனர். இதனால் செம்ம ஷாக்காகியுள்ள திமுக தலைமை போர்க்கால அடிப்படையில் கட்சியைச் சீரமைக்கும் பணியைத் தொடங்க உள்ள நிலையில், சீனியர்களை ஓரங்கட்ட முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, புதுமுகங்களை முன்னிறுத்தி மக்களிடம் உள்ள நற்பெயரை தக்கவைத்துக்கொள்ளவும் திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாம். அதன் முதற்கட்டமாக, பொதுச் செயலாளரை மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், துரைமுருகனுக்கு பதிலாக டி.ஆர்.பாலு, எ.வ.வேலு, ஆ.ராசா ஆகிய மூவரில் ஒருவரை கழகத்தின் பொதுச் செயலாளராக நியமிக்கவும் திமுக தலைமை உறுதியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. டி ஆர்பாலு உடல்நிலையைக் காரணம் காட்டி தயங்குகிறாராம். நேருவை வழக்கு நெருக்குவதால், தலைமையே யோசிக்கிறது என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், கழகத்தின் பொதுச்செயலாளரைப் போல், தலைமையையும் மாற்றிவிடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ள தலைமைக்கு இளைஞரணி சார்பில் ஒரு புதிய அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறதாம்.

திமுகவில் இளைஞர்களை இழுக்க வேண்டும் என்றால், ஒரு இளம் முகமே திமுகவின் தலைமையாக இருக்க வேண்டும் என்று இரண்டாம் கட்ட தலைவர்கள், இளைஞரணியைச் சேர்ந்தவர்கள் அறிவாலயத்திற்கு தகவலை பாஸ் செய்துள்ளார்களாம்.

இதன் எதிரொலியாக இளைஞரணிச் செயலாளரான உதயநிதிக்கு புரமோஷன் கொடுத்து செயல் தலைவராக்க வேண்டும் என்று இரண்டாம் கட்டத் தலைவர்கள் ஒருமனதாக குரல் கொடுத்து வருவதால் அறிவாலயம் ஆட்டம் கண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது, உதயநிதியின் ஜாதக கட்டமும் சாதகமாக இருப்பதால், இதுதான் சரியான நேரம் என்று சில குடும்ப உறுப்பினர்களும் சொல்கிறார்களாம். இருப்பினும் செப்டம்பரில் நடைபெறும் தி.மு.க. முப்பெரும் விழாவுக்குப் பிறகே சின்னவருக்கு புரமோஷன் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதேபோல இளைஞரணியின் புதிய செயலாளர் பதவிக்கு டாக்டர் எழிலன், அன்பில் மகேஷ் ஆகியோரது பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், முப்பெரும் விழாவில் திமுகவின் எதிர்காலத்திற்கு முன்னுரை எழுதப்படப் போகிறதா? அல்லது முடிவுரை எழுதப்படப் போகிறதா? என்பது தெரிவிடும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.