தமிழ்நாடு

கவின் படுகொலை வழக்கு: தலைமறைவாக இருந்த பெண் எஸ்.ஐ. கிருஷ்ணகுமாரி கைது!

நெல்லை மென்பொறியாளர் கவின் ஆணவப்படுகொலை வழக்கில் எஸ்.ஐ. கிருஷ்ணகுமாரியை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்

கவின் படுகொலை வழக்கு: தலைமறைவாக இருந்த பெண் எஸ்.ஐ. கிருஷ்ணகுமாரி கைது!
SI Arrest
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், தேடப்பட்டு வந்த அவரது காதலியின் தாயாரும், தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் எஸ்.ஐ. கிருஷ்ணகுமாரியைச் சிபிசிஐடி காவல் துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூக இளைஞரும், மென்பொருள் பொறியாளருமான கவின் செல்வகணேஷ், கடந்த ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி கேடிசி நகரில் காதல் விவகாரம் காரணமாகப் படுகொலை செய்யப்பட்டார். இந்த ஆணவக் கொலைச் சம்பவத்தில், கவின் காதலித்த பெண்ணின் சகோதரரான சுர்ஜித் என்பவரைப் பாளையங்கோட்டை காவல் துறையினர் ஏற்கனவே கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இக்கொலை வழக்கில் சுர்ஜித்தின் பெற்றோரும், தமிழ்நாடு சிறப்பு காவல் படை சார்பு ஆய்வாளர்களுமான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

குற்றப்பத்திரிகையும் நீதிமன்ற நடவடிக்கையும்

இவ்வழக்கில் சுர்ஜித்தின் தந்தை சரவணன், உறவினர் ஜெயபால் உள்ளிட்ட சிலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை மதுரை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்கிடையே, சிபிசிஐடி காவல் துறையினர் இந்த வழக்கில் முறையான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, கொலை நடந்த இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் மற்றும் முக்கியத் தடயங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

பெண் எஸ்.ஐ. கைது

சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் சுர்ஜித்தின் தாயான எஸ்.ஐ. கிருஷ்ணகுமாரியின் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. மேலும், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவருக்கு எதிராகப் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தலைமறைவாக இருந்த அவரைச் சிபிசிஐடி காவல் துறையினர் இன்று அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.