Breaking news

கொட்டித் தீர்க்கும் கனமழை.. மூணாறு- தேனி சாலையில் அடுத்தடுத்து நிலச்சரிவு!

கேரளாவில் பெய்துவரும் கனமழையால் இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், மூணாறு - தேனி சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையை சீர் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கொட்டித் தீர்க்கும் கனமழை.. மூணாறு- தேனி சாலையில் அடுத்தடுத்து நிலச்சரிவு!
கனமழையால் மூணாறு - தேனி சாலையில் நிலச்சரிவு.. போக்குவரத்து பாதிப்பு!
இடுக்கி மாவட்டம் மூணாறில் கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை பழைய அரசு கலைக்கல்லூரி அருகே நேற்றிரவு மற்றும் இன்று அதிகாலை நேரத்தில் இரண்டு பெரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. தற்போது அதன் கழுகு பார்வை காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

தமிழக கேரளா எல்லையை இணைக்கும் இடுக்கியில் கடந்த ஒரு வாரமாகத் தென்மேற்கு பருவமழையின் காரணமாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில், நேற்றிரவு மூணாறு பழைய அரசு கலைக்கல்லூரி அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில், சரக்கு லாரி ஒன்றும் சிக்கிக்கொண்டது.

லாரி ஓட்டுநரான மூணாறு அந்தோனியார் நகரை சேர்ந்த 58 வயதான கணேசன், லாரியிலிருந்து மீட்கப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதையடுத்து, கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, இன்று அதிகாலை 5 மணியளவில், முதல் நாள் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு அருகிலேயே மற்றொரு பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டதாலும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் வீடுகள் எதுவும் இல்லாததாலும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மண், பாறைகளை அப்புறப்படுத்த இரண்டு நாட்கள் தேவைப்படும் எனவும், மறு அறிவிப்பு வரும்வரை தேவிகுளம் வழியாக மூணாறு செல்லும் கொச்சி -தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்துக்கு முழுமையாக தடை விதிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்தடுத்து நிகழ்ந்த இரண்டு நிலச்சரிவுகளின் கழுகு பார்வை காட்சிகள் இணையத்தில் தற்போது வெளியாகி காண்போரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.