Breaking news

பெயில் ஆயிடுவேன் என வீபரித முடிவெடுத்த மாணவி.. 413 மார்க் எடுத்து தேர்ச்சி

பாபநாசத்தில் தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்ட +2 மாணவி ஆர்த்திகா, 413 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார் என்கிற செய்தி அறிந்து மாணவியின் பெற்றோர் அழுது புலம்பிய தருணம் அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது.

பெயில் ஆயிடுவேன் என வீபரித முடிவெடுத்த மாணவி.. 413 மார்க் எடுத்து தேர்ச்சி
plus 2 student who committed suicide in fear of failure
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதி படுகை புது தெருவை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவர் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள். இவர்களது 2-வது மகள் ஆர்த்திகா (வயது 17) பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் +2 படித்து பொதுத் தேர்வு எழுதி இருந்தார். தேர்வை எழுதி விட்டு வந்த நாளிலிருந்து சரியாக தேர்வு எழுதவில்லை என்று பெற்றோரிடம் சொல்லி அடிக்கடி புலம்பி வந்துள்ளார்.

தேர்வில் தான் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்திலேயே ஆர்த்திகா இருந்து வந்ததாக தெரிகிறது. பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆர்த்திகா, காலை 7 மணி அளவில் வீட்டின் பின்புறத்தில் உள்ள மாட்டுக்கொட்டகைக்குச் சென்று தனது சுடிதார் துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

ஆர்த்திகா தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சியில் மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாபநாசம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை முடிவுக்கு பின் குடும்பத்தாரிடம் மாணவியின் உடல் ஒப்படைக்கப்பட்டது .

தேர்வு தோல்வி பயத்தில் +2 மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாபநாசம் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் +2 அரசு பொதுத்தேர்வு முடிவு இன்று காலை 9 மணியளவில் வெளியானது. இந்த தேர்வில் +2 மாணவி ஆர்த்திகா இரண்டாவது குரூப் படித்து வந்துள்ளார். அதில் தமிழ் பாடத்தில் -72 மதிப்பெண்களும், ஆங்கிலம் பாடத்தில் -48 மதிப்பெண்களும், இயற்பியல் பாடத்தில்- 65 மதிப்பெண்களும், வேதியியல் பாடத்தில் -78 மதிப்பெண்களும், விலங்கியல் படத்தில் -80 மதிப்பெண்களும், தாவரவியல் பாடத்தில் -70 மதிப்பெண்களும் என மொத்தம் 413 மதிப்பெண்கள் பெற்று தேர்வில் வெற்றிப் பெற்றுள்ளார்.

மாணவி ஆர்த்திகா தேர்வில் வெற்றி பெற்றதை கண்டு பெற்றோர்களும், உறவினர்களும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். பள்ளி தலைமை ஆசிரியர் நீலாதேவியும் ,பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கல்யாணியும் மாணவியின் உயிரிழப்புக்கு தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

(எந்தவொரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வல்ல என்பதனை புரிந்துகொள்வோம். உதவிக்கு - மன நல ஆலோசனை எண் 104 மற்றும் 14416 என்ற எண்னை அழையுங்கள்)