Breaking news

ஆண்பாவம் திரைப்பட புகழ் கொல்லங்குடி கருப்பாயி காலமானார்!

ஆண்பாவம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த கொல்லங்குடி கருப்பாயி தனது 99-வது வயதில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆண்பாவம் திரைப்பட புகழ் கொல்லங்குடி கருப்பாயி காலமானார்!
கொல்லங்குடி கருப்பாயி காலமானார்
கொல்லங்குடி கருப்பாயி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற நாட்டுப்புறப் பாடகி. இவர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொல்லங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். தமிழ் நாட்டுப்புற இசையின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் இவர், பல நாட்டுப்புறப் பாடல்களைப் பாடியுள்ளார்.

அனைத்திந்திய வானொலியில் தனது இசைப் பயணத்தைத் தொடங்கிய இவர், சுமார் 30 ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். நாட்டுப்புறப் பாடகியாக மட்டுமின்றி, தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தனது முதல் படமான "ஆண்பாவம்" திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பட்டித் தொட்டி எங்கும் புகழ்பெற்றார். கலைத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 1993 ஆம் ஆண்டு தமிழக அரசின் உயரிய விருதான கலைமாமணி விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மறைந்த கொல்லங்குடி கருப்பாயிக்கு குழந்தைகள் இல்லை. அவரது கணவரும், சாலை விபத்தில் மரணமடைந்துவிட்டார். ஆண் பாவம் படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு பட வாய்ப்புகளும் வந்தன. இருப்பினும், சில படத்தின் தயாரிப்பாளர்கள் சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றினர் என வெளிப்படையாக தனியார் ஊடகத்தின் நேர்க்காணல் ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார்.

ஆண் பாவம் படத்தின் இயக்குநரும், நடிகருமான பாண்டியராஜன் அவ்வப்போது கொல்லங்குடி கருப்பாயிக்கு வேண்டிய உதவிகளை செய்து வந்துள்ளார். நடிகர் சங்கத்தில் இவரை உறுப்பினராக யாரும் சேர்க்காத நிலையில் நடிகர் விஷால், நடிகர் சங்க பதவிக்கு வந்த போது இவருக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கிய நிதியுதவி செய்தது அப்போது சமூக வலைத்தளங்களில் பேசுப்பொருளாகியது.

கடந்த 2020-ஆம் ஆண்டு, காரைக்குடியில் சாலையைக் கடக்க முயன்ற போது இரு சக்கர வாகனம் மோதியதில் இவருக்கு இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தனது இறுதி காலத்தில் மிகவும் வறுமையான நிலையில் கொல்லங்குடி கருப்பாயி வாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயி (99) வயது மூப்பு காரணமாக காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.