சினிமா

'கூலி' பட நடிகர் வெளிநாடு செல்ல தடை.. கேரள நீதிமன்றம் உத்தரவு!

'மஞ்சுமெல் பாய்ஸ்' பட நிதி மோசடி வழக்கில், அதன் தயாரிப்பாளரான நடிகர் சௌபின் சாகிருக்கு வெளிநாடு செல்ல கேரள நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

 'கூலி' பட நடிகர் வெளிநாடு செல்ல தடை.. கேரள நீதிமன்றம் உத்தரவு!
Soubin Shahir banned from traveling abroad
தமிழகத்திலும் கேரளாவிலும் மிகப்பெரிய வெற்றி பெற்ற மலையாளப் படமான 'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படத்தின் தயாரிப்பு தொடர்பாக எழுந்துள்ள நிதி மோசடி வழக்கில், அதன் தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான சௌபின் சாகிருக்கு துபாய் செல்ல கொச்சி நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்தத் தடை மலையாளத் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'மஞ்சுமெல் பாய்ஸ்' படத்துக்கு எழுந்த சிக்கல்

ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படம், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. இந்த நிலையில், அரூரைச் சேர்ந்த சிராஜ் என்பவர், படத்தின் தயாரிப்பாளர்கள் மீது நிதி மோசடிப் புகார் அளித்தார். அதில், தான் படத்தில் ரூ.7 கோடி முதலீடு செய்ததாகவும், ஆனால் திரைப்படம் வெற்றி பெற்ற பிறகும், வாக்குறுதி அளித்தபடி 40 சதவீத லாபப் பங்கு கிடைக்கவில்லை என்றும், இதனால் தனக்கு ரூ.47 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

அமலாக்கத் துறை விசாரணை

இந்த புகாரைத் தொடர்ந்து, படத் தயாரிப்பில் நடந்த நிதி மோசடி மற்றும் பணப் பரிவர்த்தனைகள் குறித்து அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டது. இந்த வழக்கில், நடிகர் சௌபின் சாகிரிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. அப்போது, படத்தின் முதலீடு, செலவு, வருவாய் உள்ளிட்டவை குறித்து அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. சௌபின் சாகிருக்கு ஏற்கனவே கேரள உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியிருந்தாலும், அவர் வெளிநாடு செல்வதற்கு சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

துபாய் செல்ல நீதிமன்றம் தடை

இதனிடையே, துபாயில் நடைபெற உள்ள விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ள நடிகர் சௌபின் சாகிர் திட்டமிட்டார். அதில் பங்கேற்பதற்கு அனுமதிக்குமாறு கொச்சி மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவரது மனுவை நீதிமன்றம் நிராகரித்து, துபாய் செல்ல தடை விதித்துள்ளது. நிதி மோசடி வழக்கில் முன்ஜாமீன் வழங்கப்பட்டிருந்தாலும், கேரள உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளின் அடிப்படையில் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடையைத் தொடர்ந்து, வெளிநாடு செல்ல அனுமதி கோரி கேரள உயர்நீதிமன்றத்தை நாடி மேல்முறையீடு செய்ய சௌபின் சாகிர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சௌபின் சாகிர் சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'கூலி' திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வரவேற்பு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.