சினிமா

Coolie movie: கூலி படம் பார்த்தேன்.. துணை முதல்வர் உதயநிதி கொடுத்த ரிவ்யூ!

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ’கூலி’ திரைப்படம், அனைவருக்கும் பிடிக்கும் வகையிலான மாஸ் எண்டர்டெயினராக உள்ளது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Coolie movie: கூலி படம் பார்த்தேன்.. துணை முதல்வர் உதயநிதி கொடுத்த ரிவ்யூ!
Deputy CM Udhayanidhi Stalin Praises Rajinikanth's Film 'Coolie' as a Mass Entertainer
'கூலி' திரைப்படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதன் முறையாக இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் கைக்கோர்த்துள்ளார். ஆரம்பம் முதலே இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது.

நடிகர் ரஜினிகாந்தினை தவிர்த்து நாகார்ஜுனா, உபேந்திரா, சோபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன், பூஜா ஹெக்டே எனப் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். குறிப்பாக, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பினை மேலும் அதிகரித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள கூலி படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே படத்தின் பாடல்களும், டிரைலருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் நடிகர் ரஜினிகாந்திற்கு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். மேலும், தான் கூலி திரைப்படத்தினை பார்த்ததாகவும், படம் நன்றாக வந்திருப்பதாகவும் தனது வாழ்த்து பதிவில் தெரிவித்துள்ளார்.

இதுத்தொடர்பாக தனது எக்ஸ் வலைத்தளத்தில், ”கலையுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார், திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்கள். இந்த வரலாற்றுத் தருணத்தில் அவரை வாழ்த்தி மகிழ்கிறேன்.

நாளை வெளியாகும் அவருடைய ‘கூலி’ திரைப்படத்தைப் பார்க்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அனைத்துத் தரப்பையும் ஈர்க்கிற Mass Enterntainer-ஆக Coolie திரைப்படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. ‘கூலி’ மாபெரும் வெற்றி பெற படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.



ரஜினியின் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படம் நாளை (ஆகஸ்ட் 14 ஆம் தேதி) உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, வட இந்தியா உட்பட அமெரிக்காவிலும் டிக்கெட் முன்பதிவில் பெரும் சாதனை படைத்துள்ளது.

முதல் நாள் வசூல் மட்டும் 100 கோடியினை தாண்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.