சினிமா

'மகுடம்' திரைப்படம்.. இயக்குநர் பொறுப்பை ஏற்றார் நடிகர் விஷால்!

இயக்குநர் ரவி அரசுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்த 'மகுடம்' படத்தை நடிகர் விஷால் இயக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

'மகுடம்' திரைப்படம்.. இயக்குநர் பொறுப்பை ஏற்றார் நடிகர் விஷால்!
Actor Vishal takes over as director
விஷால் நடிப்பில் உருவாகி வரும் 'மகுடம்' திரைப்படத்தில், இயக்குநர் ரவி அரசுவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, படத்தின் முழு இயக்கப் பொறுப்பையும் நடிகர் விஷாலே ஏற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில், விஷால், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிக்கும் 'மகுடம்' படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். ஒரே கட்டமாகப் படப்பிடிப்பினை முடிக்கத் திட்டமிட்டுப் பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது சில முக்கியமான காட்சிகளைத் தவிர மற்ற அனைத்தும் படமாக்கப்பட்டு முடிந்துவிட்டன.

விஷால் - ரவி அரசு மோதல்

'மகுடம்' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடந்தபோது, நாயகன் விஷாலுக்கும் இயக்குநர் ரவி அரசுவுக்கும் இடையே திடீரென மோதல் வெடித்தது. இதன் காரணமாக, சில காட்சிகளை விஷாலே இயக்கி வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, படத்தில் உள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தலையிட்டு இருவருக்கும் இடையிலான பிரச்சினையைச் சரி செய்துள்ளனர்.

ஆனால், இந்தப் சமரசத்துக்குப் பின்பும் விஷால் – ரவி அரசு இருவருக்கும் இடையே தொடர்ந்து பிரச்சனை நீடித்திருக்கிறது. இதன் விளைவாக, 'மகுடம்' படத்தின் முழுமையான இயக்குநர் பொறுப்பையும் விஷாலே ஏற்றிருக்கிறார்.

தற்போது 'மகுடம்' படப்பிடிப்புத் தளத்தில் ரவி அரசு இல்லாமல், விஷாலே இயக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இப்படத்தில் கதை, திரைக்கதை, வசனம் ஆகிய பொறுப்புகளுக்கு மட்டுமே ரவி அரசுவின் பெயர் இடம்பெற இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.