சினிமா

தலைவன் தலைவி: 2 வது முறையாக 100 கோடி க்ளப்பில் இணைந்த விஜய்சேதுபதி!

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி- நித்யா மேனன் நடிப்பில் வெளியான ‘தலைவன் தலைவி’ படத்தின் வசூலானது 100 கோடியை தாண்டியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

தலைவன் தலைவி: 2 வது முறையாக 100 கோடி க்ளப்பில் இணைந்த விஜய்சேதுபதி!
Vijay Sethupathi's 'Thalaivan Thalaivi' Joins the 100-Crore Club for His Second Time
குடும்ப பாங்கான படங்களை இயக்குவதில் கைத்தேர்ந்த இயக்குநரான பாண்டிராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படமாக திரையில் வெளியானது 'தலைவன் தலைவி' திரைப்படம். இந்த படத்தில் நடிகை நித்யா மேனன் கதாநாயகியாக நடித்திருந்தார்.

மேலும் இந்த படத்தில் யோகிபாபு, தீபா சங்கர், சரவணன், காளி வெங்கட், ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தினை தயாரித்து இருந்தது. இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். பாண்டிராஜ் - விஜய் சேதுபதி இணையும் முதல் படம் என்பதாலும், விஜய் சேதுபதி- நித்யா மேனன் காம்போவில் முதல் படம் என்பதாலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த படம் கடந்த ஜூலை மாதம் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

‘தலைவன் தலைவி’ திரைப்படத்துடன் வடிவேல்- பஹத் பாசில் காம்போவில் உருவான ‘மாரீசன்’ படமும் ஒரே நேரத்தில் திரையில் வெளியாகியது. மாரீசன் திரைப்படம் விமர்சன ரீதியில், நல்ல வரவேற்பினை பெற்ற போதும் வசூல் ரீதியாக பெரிய வெற்றியினை பெற முடியாமல் போனது. அதே நேரத்தில் ‘தலைவன் தலைவி’ படம் ஒரு சில நெகட்டிவ் விமர்சனங்களை பெற்ற போதும், குடும்பம் குடும்பமாக படத்தை பார்க்க திரையில் குவிந்தனர் ரசிகர்கள்.

விஜய் சேதுபதி தனது 50-வது திரைப்படமான 'மகாராஜா' படத்தின் பிரம்மாண்டமான வெற்றியை தொடர்ந்து, அவரது நடிப்பில் 'ஏஸ்' திரைப்படம் திரையில் வெளியாகியது. ‘ஏஸ்’ திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றதோடு மட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸிலும் மண்ணைக் கவ்வியது. இதனால், அடுத்து ஒரு வெற்றிப் படத்தை தர வேண்டிய நெருக்கடியில் விஜய் சேதுபதி இருந்தார்.

இதற்கிடையே தான் இயக்குநர் பாண்டிராஜ் 'பசங்க', 'மெரினா', 'கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'கதகளி', 'கடைக்குட்டி சிங்கம்', ‘நம்ம வீட்டுப் பிள்ளை' உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய பாண்டிராஜின் இயக்கத்தில் ’தலைவன் தலைவி’ படம் வெளியானது. கணவன், மனைவி இடையே நிகழும் பிரச்னைகளை மையமாக கொண்டு காமெடி கலந்து உருவாக்கப்பட்டிருந்தது இத்திரைப்படம்.



இந்நிலையில், உலகம் முழுவதும் வெளியாகிய ’தலைவன் தலைவி’ திரைப்படம் 100 கோடி வசூலைத் தாண்டியுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

'மகாராஜா' படத்தினைத் தொடர்ந்து, தன் சினிமா கேரியரில் 2 வது முறையாக 100 கோடி வசூலை கண்டுள்ளார் விஜய் சேதுபதி. இதனைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்தினை தெரிவித்து வருகிறார்கள்.