இந்தியா

12வது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுமி… நொடிப்பொழுதில் பறிபோன உயிர்!

மும்பையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 12வது மாடியில் இருந்து தவறி வீழ்ந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

12வது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுமி… நொடிப்பொழுதில் பறிபோன உயிர்!
A girl fell from the 12th floor
மும்பையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 4 வயது தான் வசித்த கட்டிடத்தின் 12வது மாடியில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையின்படி, சிறுமி அன்விகாவும் அவரது தாயும் வெளியே செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. குழந்தையை ஒரே இடத்தில் இருக்க வைப்பதற்காக, தாய் சிறுமி அன்விகாவைத் தூக்கி, நுழைவாயிலுக்கு அருகிலிருந்த காலணிகள் வைக்கும் அலமாரியின் மேல் அமர வைத்துள்ளார்.

தாய் தனது செருப்புகளை அணிந்துகொண்டு அன்விகாவின் செருப்புகளை எடுக்கும்போது, சிறுமி அலமாரியின் மீது நின்று அருகிலுள்ள ஜன்னல் கம்பியை பிடிக்க முயன்றபோது, நிலை தடுமாறி 12வது மாடியில் இருந்து கீழே விழுந்தார்.

தாயின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஓடி வந்தனர். இதனைத்தொடர்ந்து, சிறுமியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

இந்த கோர விபத்து அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. ஜன்னலில் தடுப்புக் கம்பிகள் இல்லாததே விபத்துக்குக் காரணம் என கூறப்படுகிறது.

சிறுமி அன்விகாவின் மரணம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, சாட்சிகளிடமும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.