இந்தியா

கொல்கத்தாவில் மீண்டும் அதிர்ச்சி.. இரண்டாம் ஆண்டு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை

கொல்கத்தாவில் ஐஐஎம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொல்கத்தாவில் மீண்டும் அதிர்ச்சி.. இரண்டாம் ஆண்டு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை
Second year student sexually assaulted in Kolkata
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மேண்ட் (IMM) வளாகத்தில் உள்ள ஆண்கள் விடுதியில் இரண்டாம் ஆண்டு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஐஐஎம் வளாகத்திற்குள் ஒரு மாணவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக ஒரு பெண் நேற்று (ஜூலை 11) இரவு ஹரிதேவ்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரையடுத்து இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

சம்பவம் குறித்து மாணவி அளித்த புகாரில், தான் கவுன்சிலிங் வழங்குவதற்காக ஆண்கள் விடுதிக்கு அழைக்கப்பட்டதாகவும், அங்கு வழங்கப்பட்ட பானத்தைக் குடித்த பிறகு தான் மயக்கமடைந்ததாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார். மேலும், மயக்கம் தெளிந்த பிறகுதான் தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதை உணர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விஷயம் குறித்து யாரிடமாவது கூறினால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை மிரட்டியதாகவும் அந்தப் பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும், குற்றம் சாட்டப்பட்ட மாணவர் மகாவீர் தோப்பண்ணவார், ஜூலை 19 ஆம் தேத்தி வரை காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

தென் கொல்கத்தாவில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் 24 வயது மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அந்த வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு தற்போது காவலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.