இந்தியா

லிஸ்ட் பெருசா போகுது.. ரூ.85 ஆயிரத்துக்கு நொறுக்குத்தீனி சாப்பிட்ட அரசு அதிகாரிகள்!

மத்திய பிரதேசத்தில் உள்ள கிராமத்தில் நடந்த பஞ்சாயத்து கூட்டத்தில் நொறுக்கு தீனிக்காக ரூ.85 ஆயிரம் செலவிடப்பட்டதாக வெளியான கணக்கு பட்டியல் இணையத்தில் வைரலாகிறது.

லிஸ்ட் பெருசா போகுது.. ரூ.85 ஆயிரத்துக்கு நொறுக்குத்தீனி சாப்பிட்ட அரசு அதிகாரிகள்!
Controversial expense list
மத்தியப் பிரதேசத்தின் பத்வாஹி கிராமத்தில் ஜல் கங்கா சம்வர்தன் மிஷன் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பஞ்சாயத்து கூட்டத்தில் செலவிடப்பட்டுள்ள கணக்கு பட்டியல் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. இந்தக் கூட்டத்தில் ஸ்நாக்ஸ், பழங்கள் மற்றும் உலர் பழங்களுக்காக ரூ. 85,000 செலவழிக்கப்பட்டதற்கான பில்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த மே 25 ஆம் தேதி நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஷாதோல் மாவட்ட ஆட்சியர், மூத்த அதிகாரிகள், பஞ்சாயத்து பிரதிநிதிகள் மற்றும் கிராம மக்கள் உட்பட சுமார் 24 பேர் பங்கேற்றதாகத் கூறப்படுகிறது.

அப்போது அவர்களுக்கு நொறுக்குத்தீனிகள், பழங்கள் ஆகியவை பரிமாறப்பட்டது. கூட்டத்தில் ரூ.85 ஆயிரத்துக்கு சாப்பிட்டதற்காக கணக்கு பட்டியல் பதிவு செய்யப்பட்டுள்ளது. 6 கிலோ முந்திரி, 3 கிலோ திராட்சை, 3 கிலோ பாதாம், 9 கிலோ பழங்கள், 5 டஜன் வாழைப்பழங்கள் மற்றும் 30 கிலோ ஸ்நாக்ஸ் ஆகியவற்றை உட்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கேதார் சிங் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “நான் உலர் பழங்களைச் சாப்பிடுவதில்லை, கூட்டத்திலும் நான் அவற்றைச் சாப்பிடவில்லை. நான் சீக்கிரமாகவே புறப்பட்டுவிட்டேன். இந்த கணக்கு பட்டியல் என் கவனத்திற்கு வந்தவுடன், கோபஹரு ஜன்பத் பஞ்சாயத்து தலைமை நிர்வாக அதிகாரி மூலம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறினார்.

மேலும் ஒரு திருப்பமாக, பொருட்கள் வாங்கப்பட்டதாகக் கூறப்படும் பர்ரி கிராமத்தில் உள்ள மளிகைக் கடையின் உரிமையாளர் கோவிந்த் குப்தா, “என் கடையில் இருந்து எந்த நொறுக்கு தீனிகளும் வாங்கப்படவில்லை” கூறியுள்ளார்.

பஞ்சாயத்து கூட்டத்தில் செலவிடப்பட்டுள்ள கணக்கு பட்டியல் சமூகவலைதளங்களில் வெளியாகி பேசுபொருளாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்தியப் பிரதேசத்தில உள்ள பள்ளிக்கூடத்தின் ஒரு சுவருக்கு பெயிண்ட் அடிக்க நூறுக்கு மேற்பட்டோர் பயன்படுத்தபட்டதாகவும், ரூ.1.06 செலவு செய்யப்பட்டதாகவும் வெளியான கணக்கு பட்டியல் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.