இந்தியா

டெல்லியில் கொட்டித்தீர்த்த கனமழை.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

தலைநகர் டெல்லியில் விடிய விடிய கனமழை பெய்ததால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தலைநகரின் இயல்புநிலை கடும் பாதிப்புக்குள்ளானது.

டெல்லியில் கொட்டித்தீர்த்த கனமழை.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
டெல்லியில் கொட்டித்தீர்த்த கனமழை.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
தலைநகர் டெல்லியில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், இரவு முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. தலைநகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றதால், நள்ளிரவில் கார்கள், கனரக வாகனங்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். குறிப்பாக மிண்டோ சாலையில் உள்ள சுரங்கப்பாதையில் சுமார் 5 அடி அளவுக்கு தண்ணீர் தேங்கியதால், அதிகாலையில் கார் ஒன்று முழுவதுமாக மூழ்கியது.

இந்நிலையில், சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் இன்றும் டெல்லிக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும், வீட்டில் பாதுகாப்பாக இருக்கவும் பொதுமக்களுக்கு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

இதுமட்டுமின்றி, சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, பணிக்குச் செல்வோர் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர். கனமழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பல்வேறு விமானங்கள் தரையிறங்குவதிலும் புறப்படுவதிலும் தாமதம் எற்பட்ட நிலையில், 100-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, இன்று காலை முதல் விமான சேவை படிப்படியாக சீராக தொடங்கியுள்ளது.

மேலும், தொடர்ந்து மோசமான வானிலை காரணமாக பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்படவோ, நேரம் மாற்றப்படவோ வாய்ப்புகள் உள்ளதால், இன்று விமான பயணத்தை திட்டமிட்டுள்ள பயணிகள் விமான போக்குவரத்து குறித்த தகவலை முன்கூட்டியே அறிந்து கொள்ள டெல்லி விமான நிலைய நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.