இந்தியா

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: மீண்டும் முடங்கியது மக்களவை!

எதிர்க்கட்சி எம்பிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: மீண்டும் முடங்கியது மக்களவை!
Lok Sabha adjourned again
சீன எல்லைப் பிரச்சினை குறித்துப் பேச அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டங்களால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நிலைகுலைந்துள்ளன. குறிப்பாக மக்களவையில் கடந்த இரண்டு நாட்களாக எந்தவிதப் பணிகளும் நடைபெறாத சூழல் உருவாகியுள்ளது.

ராகுல் காந்தியின் உரையும்.. முடங்கிய பிரதமரின் பேச்சும்!

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய ராகுல் காந்தி, முன்னாள் ராணுவத் தளபதி நரவணேவின் புத்தகக் குறிப்புகளை முன்வைத்துச் சீன எல்லைப் பிரச்சினை குறித்துக் கேள்வி எழுப்பினார். இதற்குச் சபாநாயகர் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதன் விளைவாக, நேற்று மாலை பிரதமர் மோடி வழங்கவிருந்த நன்றி உரை நிகழ்த்தப்படாமலேயே, மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இன்றும் தொடரும் அமளி: சில நொடிகளில் ஒத்திவைப்பு

இன்று காலை 11 மணிக்கு அவை கூடியவுடனேயே, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டனர். ராகுல் காந்தியைப் பேச அனுமதிக்க வேண்டும் என்றும், 8 எம்பிக்களின் இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால், சபாநாயகர் ஓம் பிர்லா அவை தொடங்கிய சில நொடிகளிலேயே பகல் 12 மணி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

மதியமும் நீடித்த மோதல்

மீண்டும் 12 மணிக்கு அவை தொடங்கியபோதும் அமைதி திரும்பவில்லை. ராகுல் காந்தியைப் பேச விடாமல் தடுப்பது ஜனநாயகப் படுகொலை என எதிர்க்கட்சியினர் கூச்சலிட்டனர். சபாநாயகரின் இருக்கையைச் சூழ்ந்து கொண்டு அவர்கள் போராட்டம் நடத்தியதால், சபை நடவடிக்கைகளைத் தொடர முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, மீண்டும் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.