இந்தியா

"தெற்கின் குரல் ஒடுக்கப்படுகிறது.. " மக்களவையில் கனிமொழி எம்பி அதிரடி பேச்சு!

தொகுதி மறுவரையறை மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்ற திமுக எம்.பி. கனிமொழி, இது தென் மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் செயல் என ஆவேசமாக உரையாற்றினார்.


Kanimozhi mp
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தொகுதி மறுவரையறை மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்ற திமுக எம்.பி. கனிமொழி, இது தென் மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் செயல் என ஆவேசமாக உரையாற்றினார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரையறை மசோதா, இந்திய ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் மிகப்பெரிய தாக்குதல் என கனிமொழி எம்.பி. விமர்சித்தார். மாநில அரசுகளுடன் முறையான ஆலோசனைகளை நடத்தாமல் இவ்வளவு அவசரமாக இந்த மசோதாவைக் கொண்டு வருவது ஏன்? என்று கேள்வி எழுப்பிய அவர், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சிற்கும் மசோதாவில் உள்ள அம்சங்களுக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

பாதிக்கப்படும் தமிழ்நாடு

தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி கண்டுள்ள தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என கனிமொழி கவலை தெரிவித்தார். குறிப்பாக, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மறுவரையறை செய்யப்பட்டால், தமிழ்நாட்டிற்கு 11 நாடாளுமன்ற இடங்கள் குறையும் அபாயம் இருப்பதை அவர் விளக்கினார். மேலும், எம்.பி.க்களின் எண்ணிக்கையை 850-ஆக உயர்த்துவது, நாடாளுமன்ற விவாதங்களின் தரத்தைக் குறைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தென்னகத்தின் பங்களிப்பு கேள்விக்குறி?

எம்.பி.க்கள் எண்ணிக்கை உயர்த்தப்படும்போது, எதிர்காலத்தில் தென் மாநிலங்களின் ஒரு வாக்கு கூடத் தேவைப்படாமல் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அரசியலமைப்பைத் திருத்திவிட முடியும். இது நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தைச் சீர்குலைப்பதுடன், குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் கூடத் தென் மாநிலங்களின் பங்களிப்பைக் கேள்விக்குறியாக்கிவிடும் என்று அவர் எச்சரித்தார்.

அரசியல் பொறி

மகளிர் இட ஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறை மசோதாவோடு இணைப்பது ஒரு திட்டமிடப்பட்ட 'அரசியல் பொறி' என்று சாடிய கனிமொழி, பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை இதிலிருந்து பிரிக்க மறுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். தேர்தல் நடக்கும் வேளையில் இரண்டு வாரங்கள் கூடக் காத்திருக்க முடியாமல் இந்த மசோதாவைக் கொண்டு வந்தது ஜனநாயகப் பண்பல்ல என்றும் அவர் தனது உரையில் பதிவு செய்தார்.