அரசியல்

எடப்பாடி தவெக வேட்பாளர் மாயம்: கடத்தப்பட்டதாகத் தொண்டர்கள் பரபரப்புப் புகார்!

எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடவிருந்த வேட்பாளர் அருண்குமார் திடீரென மாயமானதாக எழுந்துள்ள புகார், தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி தவெக வேட்பாளர் மாயம்: கடத்தப்பட்டதாகத் தொண்டர்கள் பரபரப்புப் புகார்!
TVK Candidate
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடவிருந்த வேட்பாளர் அருண்குமார் திடீரென மாயமானதாக எழுந்துள்ள புகார், தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுகவின் காசி ஆகியோர் போட்டியிடும் முக்கியத் தொகுதியான எடப்பாடியில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அருண்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இன்று நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையின்போது, தொழில்நுட்பக் காரணங்களால் அருண்குமாரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தச் சூழலில், திடீரென அவர் காணாமல் போனது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அருண்குமாரைத் தொடர்புகொள்ள முயன்றபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த தவெக தொண்டர்கள், எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது வேட்பாளர் திட்டமிட்டு மாயமாக்கப்பட்டுள்ளதாகக் கூறி அங்கு அவர்கள் கூச்சலிட்டதால் பெரும் பதற்றம் நிலவியது.

கடத்தல் புகார் மற்றும் போலீஸ் விசாரணை

அருண்குமாரை நீண்ட நேரமாகியும் கண்டுபிடிக்க முடியாததால், அவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டிருக்கலாம் எனத் தவெக தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தங்களது வேட்பாளரை யாரோ கடத்திச் சென்றுவிட்டதாகத் தொண்டர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இது தொடர்பாகப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனு தள்ளுபடி செய்யப்பட்ட மன உளைச்சலில் அவர் சென்றாரா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்ற கோணத்தில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.