அரசியல்

"ராணிப்பேட்டை தொகுதியில் என் தந்தை தான் வேட்பாளர்"- வினோத் காந்தி திடீர் முடிவு!

ராணிப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வினோத் காந்தி, தனது தந்தை அமைச்சர் ஆர். காந்திக்காகத் தனது வாய்ப்பை விட்டுக்கொடுப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.


Vinod Gandhi
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வினோத் காந்தி, தனது தந்தை அமைச்சர் ஆர். காந்திக்காகத் தனது வாய்ப்பை விட்டுக்கொடுப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை தொகுதியில் தற்போதைய அமைச்சர் ஆர். காந்திக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டு, அவரது மகன் வினோத் காந்திக்கு திமுக தலைமை வாய்ப்பு வழங்கியிருந்தது. இதனால் அதிருப்தியில் இருந்த அமைச்சர் காந்தி, தனக்கே மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் எனத் தலைமைக்குக் கோரிக்கை விடுத்து வந்ததாகக் கூறப்பட்டது. இதன் காரணமாக வினோத் காந்தி இதுவரை தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்காமல் இருந்து வந்தார்.

வினோத் காந்தியின் அறிக்கை

இந்நிலையில், வினோத் காந்தி இன்று வெளியிட்ட அறிக்கையில், "2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் அரிய வாய்ப்பை எனக்கு அளித்து, என்னை நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்த தலைவருக்கும், சகோதரர் உதயநிதிக்கும், எனது இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், என் தந்தையார் மீண்டும் போட்டியிடும் உறுதியான விருப்பத்தை கருத்தில் கொண்டு, இந்த வாய்ப்பை அவருக்கு மரியாதையுடன் மீண்டும் ஒப்படைக்க முடிவு செய்துள்ளேன்.

என்னை உறுதியாக ஆதரித்து, நம்பிக்கை அளித்த அனைத்து ஆதரவாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்னும் நீண்ட வாழ்க்கை முன் உள்ளது என்பதில் உற்சாகத்துடன், சேவை செய்து சாதிக்க நான் உறுதியுடன் இருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தலைமையின் முடிவு என்ன?

மகன் தனது தந்தைக்கு வாய்ப்பை விட்டுக்கொடுப்பதாக அறிவித்தாலும், ராணிப்பேட்டை தொகுதி வேட்பாளர் மாற்றம் குறித்து திமுக தலைமையிடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இதனால் அந்தத் தொகுதியில் மீண்டும் அமைச்சர் காந்தியே போட்டியிடுவாரா அல்லது தலைமை வேறு முடிவெடுக்குமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.