அரசியல்

"பிளாக்மெயில் செய்வது தான் மகாராஷ்டிர முதல்வரின் வேலையா?- முதல்வர் ஸ்டாலின்

மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதல்வரின் வேலையா? என முதல்வர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.


CM Stalin
மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதல்வரின் வேலையா? என முதல்வர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.

மதுரை தெற்கு தொகுதி பா.ஜ.க வேட்பாளர் ராம ஸ்ரீநிவாசனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், நேற்று வேட்பு மனு தாக்கலின் போது உடனிருந்தார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மதுரை தெற்கு தொகுதி வேட்பாளர் ராம ஸ்ரீநிவாசன் வெற்றி பெறுவார். அவர் எம்.எல்.ஏ ஆனதும் பிரதமர் மோடியிடம் அவரை அழைத்துச் செல்வோம். பிரதமரை அவர் சந்தித்ததும் மதுரைக்கு மெட்ரோ ரயில்திட்டம் வந்து விடும்" என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கருத்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "பா.ஜ.க. MLA-வைத் தேர்ந்தெடுத்தால்தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதலமைச்சரின் வேலையா?

அரசியலமைப்பின் மீது உறுதிமொழி ஏற்ற ஒரு முதலமைச்சர், எதிர்க்கட்சி ஆளும் மாநிலத்தில் வந்து இப்படி பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும்.

நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசின் புறக்கணிப்பை மீறி, தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வரும் சாதனைத் திட்டங்கள் எத்தனை என்று அவருக்குத் தெரியுமா? தெரியாவிட்டால் கேட்டுத் தெரிந்துகொண்டு பேச வேண்டும்.

டபுள் எஞ்சின் என்று நீங்கள் பீற்றும் டப்பா எஞ்சின் மாநிலங்களையும் தாண்டி, திராவிட மாடல் ஆளும் தமிழ்நாடுதான் Double Digit பொருளாதார வளர்ச்சியைச் சாதித்துள்ளது என்பது நினைவில் இருக்கட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.