அரசியல்

எத்தனை உயிர்களை அரசு பறிக்கப் போகிறது? அன்புமணி காட்டம்

“நிலங்களை பறிப்பதன் மூலம் இன்னும் எத்தனைப் பேரின் உயிரை திமுக அரசு பறிக்கப் போகிறது” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

எத்தனை உயிர்களை அரசு பறிக்கப் போகிறது? அன்புமணி காட்டம்
Anbumani Ramadoss
“அப்பாவி மக்களின் நிலங்களை பறிப்பதன் மூலம் இன்னும் எத்தனைப் பேரின் உயிரை திமுக அரசு பறிக்கப் போகிறது என்று தெரியவில்லை” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் உயிரிழந்த பெண்

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “திருவள்ளூர் மாவட்டம் செங்காத்தகுளம் பகுதியில் முப்போகம் விளையும் விவசாய நிலங்களை அறிவுசார் நகரம் அமைப்பதற்காக கையகப்படுத்தும் திமுக அரசைக் கண்டித்து பாமக சார்பில் நேற்று முன்நாள் நடைபெற்ற நிகழ்ச்சியில் என்னுடன் கலந்து கொண்ட மேல்மாளிகைப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தனபாக்கியம் என்ற பெண்மணி உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து பெரும் வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எத்தனை உயிர்களை அரசு பறிக்கும்

அறிவுசார் நகரம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களைப் பார்ப்பதற்காக நான் சென்றிருந்த போது, தனபாக்கியம் என்னை சந்தித்து முறையிட்டார். அப்போதே அவர் கலங்கிய மன நிலையில் தான் இருந்தார். அவருக்கு சொந்தமாக 3 ஏக்கர் நிலம் மட்டுமே இருப்பதாகவும், அதையும் அடி மாட்டு விலைக்கு அரசு பறித்துக் கொண்டால் தமக்கு வாழ்வாதாரமே இருக்காது என்று கலங்கினார். அவருக்கு ஆறுதல் கூறிய நான், உங்களின் நிலம் கையகப்படுத்தப்படாமல் பாதுகாப்பேன் என்று உறுதியளித்தேன்.

அதைத் தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்டு ஆவேசமாக பேசினார். அதன் பின் வீட்டில் மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுவதை நம்ப முடியவில்லை. நிலம் பறிபோய்விடும் என்ற அழுத்தமும், மன உளைச்சலும் தான் அவரது உயிரிழப்புக்கு காரணம் ஆகும். அப்பாவி மக்களின் நிலங்களை பறிப்பதன் மூலம் இன்னும் எத்தனைப் பேரின் உயிரை திமுக அரசு பறிக்கப் போகிறது என்று தெரியவில்லை.

திட்டத்தை கைவிட வலியுறுத்தல்

விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழும் நிலங்களை பறிக்கும் போக்கை தமிழக அரசு கைவிட வேண்டும். விளைநிலங்கள் எதற்காகவும் கையகப்படுத்தப்படாது என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும். உயிரிழந்த தனபாக்கியம் குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.