அரசியல்

ஐ.ஆர்.எஸ் To அரசியல்: தமிழ்நாட்டில் மாற்றத்தை உருவாக்கப்போகிறாரா அருண்ராஜ்!

மத்திய அரசின் வேலையை வேண்டாம் என்று உதறிவிட்டு ஐ.ஆர்.எஸ் அதிகாரியான அருண்ராஜ் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சேகர் ரெட்டியை கதறவிட்ட ஐ.ஆர்.எஸ் அதிகாரி திராவிட கட்சிகளுக்கு என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

ஐ.ஆர்.எஸ் To அரசியல்: தமிழ்நாட்டில் மாற்றத்தை உருவாக்கப்போகிறாரா அருண்ராஜ்!
ஐ.ஆர்.எஸ் To அரசியல்: தமிழ்நாட்டில் மாற்றத்தை உருவாக்கப்போகிறாரா அருண்ராஜ்!
2026 தேர்தலுக்கு திமுக, அதிமுக, பாஜக, நாதக என அனைத்து கட்சிகளும் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், தவெகவும் தீவிரமாக செயலாற்ற தொடங்கியுள்ளது. திமுக அதன் கூட்டணிகளை பலமாக வைத்துள்ள நிலையில், பாஜகவுடன் கைக்கோர்த்து அதிமுக பலமாக மாறியுள்ளது.

இந்த நிலையில் தவெகவிற்கு கூட்டணி பலம் தேவைப்படுவதாகவே அரசியல் விமர்சகர்கள் கூறும் நிலையில், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த அஞ்சலையம்மாளை கொள்கைத் தலைவராக வைத்துள்ளதால் பாமகவுடன் தவெக கைக்கோர்க்குமா? என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதேபோல், விஜயகாந்த் செண்டிமெண்டை வைத்து வாக்குகளை அள்ள நினைக்கும் தேமுதிக, கூட்டணிக்கு ஆள் இல்லாமல் தவியாய் தவித்து வருவதால், அவர்களுக்கும் தவெக வாழ்க்கை கொடுக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இப்படி கூட்டணிக்கான கணக்குகளை போட்டு வரும் விஜய், கட்சி கட்டமைப்பை பலப்படுத்திக் கொண்டே வருகிறார். கட்சி தொடங்கப்பட்டதில் இருந்து தவெகவில் முக்கிய பிரமுகர் இணைந்தபடி உள்ள நிலையில், ஆதவ் அர்ஜூனா, சி.டி.நிர்மல்குமார் போன்றவர்களை தொடர்ந்து தற்போது கட்சிகள், அரசாங்கம் என அனைத்திலும் அதிருப்தியில் உள்ள நபர்களை ஒன்றிணைக்க திட்டமிட்டுள்ளாராம் தவெக தலைவர் விஜய்.

அதன்படி, தவெகவில் மத்திய அரசாங்க அதிகாரி ஒருவர் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். அவர் வேறு யாரும் இல்லை ஐ.ஆர்.எஸ் அதிகாரியான அருண்ராஜ் தான்.

சேலத்தைச் சேர்ந்த மருத்துவர் அருண்ராஜ், 2009 ஆம் ஆண்டு சென்னையில் ஐஆர்எஸ் அதிகாரியாக வருமானவரித் துறையில் பணியைத் தொடங்கினார். பெரியார் கொள்கைகளை ஆதரித்து சமூக வலைதளங்களில் பதிவுகளை பதிவு செய்து வந்த இவர், 2016ல் ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டியின் கூட்டாளியிடம் நடத்திய சோதனையில் ரூ.70 கோடி ரொக்கம் கைப்பற்றி பாராட்டை பெற்றவர். இந்த ரெய்டின் பின்னணியில் செயல்பட்டிருந்ததால் அருண்ராஜ், மத்திய அரசின் குட்புக்கிலும் இடம்பெற்றார். சென்னையில் பணியாற்றிய அவர், 2021 மார்ச் மாதம் திடீரென பீகாருக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில், IRS உயரதிகாரியாக பணியாற்றி வரும் இவர், விஜய் கட்சி துவங்கியதில் இருந்தே விஜய்யின் ஆதரவாளராகவும் இருந்ததோடும் அவருக்கு ஆலோசனை வழங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது. குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால், அதிகாரப்பூர்வமாக இல்லையென்றாலும் மறைமுகமாக விஜய்க்கு அரசியல் ஆலோசகராக செயல்பட்டு வந்ததாக பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இத்தகையச் சூழலில், இவர் திடீரென தன்னுடைய மத்திய அரசு பணியை ராஜினாமா செய்துள்ளார். இவரின் இந்த ராஜினாமா பல்வேறு சந்தேகங்களை எழுப்பவதோடு, தவெகவில் இணைந்து முழுநேர அரசியலில் குதிக்க உள்ளாரோ என்ற கேள்விகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து பனையூர் வட்டாரத்தில் விசாரித்தபோது, அருண்ராஜ் தவெகவில் இணைய உள்ளதாகவும், தவெகவின் இணை பொதுச்செயலாளராக நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. காரணம், விஜய்க்கு தேர்தல் வியூகங்களை வகுத்து தரும் ஜான் ஆரோக்கியசாமியை அருண்ராஜ் தான் விஜய்க்கு அறிமுகம் செய்து வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆரம்பத்திலிருந்தே விஜய்யின் ரசிகர் மன்றம், பிறகு மக்கள் இயக்கம், இப்போது தமிழக வெற்றிக் கழகம் என ஒவ்வொரு வளர்ச்சியிலும், விஜய்யுடன் தோளோடு தோள் நின்றுக் கொண்டிருப்பதாக கூறப்படும் அருண்ராஜ், ஒருவேளை தவெகவில் இணைந்தால் தவெகவின் மவுஸ் எகிறும் என்று கூறப்படுகிறது. மேலும், விரைவிலேயே சென்னைக்கு வந்து விஜய்யை சந்தித்து தவெகவில் இணைவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

எனவே, சேகர் ரெட்டியை கதறவிட்ட அருண்ராஜ், திராவிட கட்சிகளை கதறவிடுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.