அரசியல்

விசைத்தறியாளர்களின் வயிற்றில் அடிப்பது நியாயமா? நயினார் நாகேந்திரன்

விசைத்தறியாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடலா? என்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

விசைத்தறியாளர்களின் வயிற்றில் அடிப்பது நியாயமா? நயினார் நாகேந்திரன்
CM Stalin and Nainar Nagendran
நலிவடைந்த விசைத்தறியாளர்களின் வாழ்வாதாரத்தைக் கெடுத்து, அவர்களைத் தொடர்ந்து வஞ்சிப்பது தான் திராவிட மாடலா? என்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக அரசு சார்பில் 2026-ஆம் ஆண்டு பொங்கலன்று வழங்கவிருக்கும் இலவச வேட்டி, சேலைக்கான உற்பத்தி அரசாணையில், கடந்த ஆண்டை விட 76 லட்சம் சேலைகள் மற்றும் 48 லட்சம் வேட்டிகள் குறைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

உற்பத்தி எண்ணிக்கையை குறைத்து வருவது ஏன்?

இதன் மூலம் வெறும் 26,300 விசைத்தறிகளுக்கு மட்டுமே வேலை இருக்கும் எனவும், இதனால் 1 லட்சம் விசைத்தறி தொழிலாளர்கள் 2 மாதம் வேலையிழக்கும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் நெசவாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

வருடம் முழுவதும் பொங்கல் வேட்டி, சேலைக்கான ஆர்டர்களை எதிர்நோக்கி காத்திருக்கும் நெசவாளர் பெருமக்கள், நூல் கொள்முதலில் ஊழல், மானியத் தொகையில் கமிஷன், வேட்டி, சேலை வழங்குவதில் முறைகேடு என திமுக அரசின் நிர்வாகக் குளறுபடிகளால் அல்லல்படுவது போதாதென்று, ஒவ்வொரு வருடமும் இலவச வேட்டி, சேலைக்கான உற்பத்தி எண்ணிக்கையை முடிந்த வரையில் திமுக அரசு குறைத்து வருவது ஏன்? ஏழை மக்கள் ஆளும் அரசை எதிர்த்து என்ன செய்துவிட முடியும் என்ற இளக்காரமா?

மக்கள் பாடம் புகட்டுவார்கள்

"உலகிலேயே நாம் தான் நம்பர் ஒன் முதலமைச்சர்" என்ற கனவுலகில் வாழும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் நெசவாளர்களின் நலனில் அக்கறை செலுத்தத் தவறியதன் விளைவு என்ன என்பதை வரும் சட்டமன்றத் தேர்தலில் புரிந்து கொள்வார். ஏழை மக்களைக் கிள்ளுக்கீரையாக நினைக்கும் திமுக அரசுக்கு 2026 இல் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.