அரசியல்

பாஜக-வினரின் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது- நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

மக்கள் நலனை முன்னிறுத்தி போராடும் பாஜக-வினரின் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது” என்று நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

பாஜக-வினரின் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது- நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
Nainar Nagendran
திருப்பூர் மாவட்டம், வீரபாண்டியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி பாஜகவினர் நேற்று (ஜூலை 15) சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து தடை பட்டதால் அங்கு விரைந்த போலீசார், பாஜகவினரை குண்டுக்கட்டாக கைது செய்ய முயன்ற நிலையில் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு போலீசார் அனைவரையும் கைது செய்து அழைத்து சென்றனர். மேலும், பாஜக பெண் நிர்வாகி ஒருவரை போலீசார் கைது செய்ய முயன்றபோது அவருக்கு காயம் ஏற்பட்டதாக குற்றச்சாட்டப்பட்டது.

இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில், “திருப்பூர் மாவட்டம் வீரபாண்டியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி தமிழக பாஜக-வின் திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர் சீனிவாசன் தலைமையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் உள்ளூர் காவல்துறையினர் போராட்டக்காரர்களை மூர்க்கத்தனமாகத் தாக்கி அப்புறப்படுத்தியுள்ளனர்.

இந்தத் தள்ளு முள்ளில் பாஜக-வின் திருப்பூர் வடக்கு மாவட்டச் செயலாளர் ஜீவா உமாவிற்கு காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அரசுப் பள்ளிகளின் அவலங்களைக் கண்டுகொள்ளாது, அதைப் பற்றி பேசுபவர்கள் மீது அடக்குமுறையை ஏவும் திமுக அரசின் இந்த அராஜகப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

கொலை, கொள்ளை, பாலியல் குற்றம் செய்யும் கொடும் குற்றவாளிகள் எல்லாம் தமிழகத்தில் பாதுகாப்பாக சுற்றித் திரிகின்றனர். ஆனால், மக்கள் நலனை முன்னிறுத்தி போராடும் பாஜக-வினரின் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. தேடித்தேடி பொய் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. மக்களின் ஜனநாயகக் குரல்வளையை நெரிக்கும் திமுக அரசின் இந்தக் கொடுங்கோல் ஆட்சிக்குக் கூடிய விரைவில் மக்கள் முடிவுரை எழுதுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.