இந்தியா

விமானம் மீது மோதிய சரக்கு லாரி.. மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு

மும்பை விமான நிலையத்தில் ஓடுபாதையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானம் மீது சரக்கு லாரி மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமானம் மீது மோதிய சரக்கு லாரி.. மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு
Cargo truck hits plane
மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை, ஆகாசா ஏர் (Akasa Air) விமானம் மீது ஒரு சரக்கு லாரி மோதியது. இந்த விபத்தைத் தொடர்ந்து, விமானம் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி, “ஓடுதளத்தில் QP1410 என்ற விமானம் மும்பை - டெல்லி செல்வதற்காக தயார் நிலையில் நிறுத்து வைக்கப்பட்டிருந்தது. அப்போது, ஒரு தரைக்கட்டுப்பாட்டு ஊழியரால் இயக்கப்பட்டு வந்த சரக்கு லாரி விமானத்தின் மீது மோதியது.

இந்த விபத்தைத் தொடர்ந்து, விமானத்தை முழுமையாக ஆய்வு செய்து வருகிறோம். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “இந்தச் சம்பவம் குறித்து சரக்கு லாரியை இயக்கிய தரைக்கட்டுப்பாட்டு ஊழியரிடம் நாங்கள் விசாரித்து வருகிறோம்,"என்று ஆகாசா ஏர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஆகாசா ஏர் விமான நிறுவனத்தின் மற்றொரு விமானம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு அதில் இருந்த சரக்குகள் இறக்கப்பட்டு வந்தன. அந்த பணியில் இந்த சரக்கு லாரி ஈடுபட்டு இருந்தது. அப்போது, வாகனத்தை இயக்கிய தரைக்கட்டுப்பாட்டு ஊழியரிடம் விமானத்தின் இறக்கையின் உயரம் பற்றிய சரியான கணிப்பு இல்லாமல் செயல்பட்டு உள்ளார் என கூறப்படுகிறது.

இந்த விபத்தினால் விமானத்தின் வலது இறக்கையின் நுனிப் பகுதி சேதமடைந்துள்ளது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அகாசா ஏர், மாற்று விமானத்தை ஏற்பாடு செய்து பயணிகளை டெல்லிக்கு அனுப்பியது.

ஓடுதளத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானத்தின் மீது சரக்கு லாரி மோதிய சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.