அரசியல்

"புதிய காட்சிகள் எங்களுக்கு எதிரிகள் அல்ல"- அமைச்சர் ரகுபதி பேட்டி!

"புதிய கட்சிகளை நாங்கள் அரசியல் எதிரிகளாகப் பார்க்கவில்லை" என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.


Minister Regupathy
“புதிய கட்சிகளை நாங்கள் அரசியல் எதிரிகளாகப் பார்க்கவில்லை. திராவிட மாடல் ஆட்சியின் கருத்துகளுக்கு எதிரானவர்களைத் தான் நாங்கள் எதிரிகளாக பார்க்கிறோம். திமுக தமிழகத்தின் அசைக்க முடியாத கட்சி” என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி நிச்சயம்

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஒத்தக்கருத்துடைய கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஆனால் டி.டி.வி.தினகரனையோ, ஓ.பி.எஸ்.சையோ சேர்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறாரா? இதிலிருந்து அவர்களுக்குள் ஒத்த கருத்து இல்லை என்பது தெரிகிறது. பியூஸ்கோயல் அனைவரையும் ஒன்று சேர்ப்பதற்காக வருகிறார். அவருக்கு தமிழ் நாட்டின் அரசியல் தட்பவெட்ப நிலை தெரியாது. அதனால் நிச்சயமாக அவர் நினைப்பது தமிழ்நாட்டில் நடக்காது.

சாக்கு போக்கு சொல்வதற்காக நயினார் நாகேந்திரன் இருமுனைப் போட்டி என்பதை முன் வைத்திருக்கிறார். எத்தனை முனை போட்டி வந்தாலும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் செய்துள்ள இந்த ஐந்தாண்டு கால சாதனை தி.மு.க. கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை நிச்சயம் பெற்று தரும்" என்றார்.

பொங்கல் பரிசுத்தொகை - ரகசியம்

தொடர்ந்து பேசிய அவர், "எடப்பாடி பழனிசாமி அவரது ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகையின் போது ரூ.5 ஆயிரம் கொடுத்து இருக்கலாம், கொடுக்காமல் இருந்திருக்கலாம். நாங்கள் தற்பொழுது இதைப் பற்றி சொல்ல மாட்டோம். என்ன என்பது ரகசியமாகத்தான் இருக்கும். திடீரென்று தான் அறிவிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

'புதிய காட்சிகள் எதிரிகள் அல்ல'

அ.தி.மு.க.வால் மெகா கூட்டணி அமைக்க முடியாது. தி.மு.க. கூட்டணியில் இருந்து ஒரு செங்கலை கூட உருவ முடியாது. அரசியல் எதிரிகளாக புதிய கட்சிகளையோ, எதையுமே பார்க்கவில்லை. திராவிட மாடல் ஆட்சியினுடைய கருத்துக்கு எதிரானவர்களை நாங்கள் எதிரிகளாக பார்க்கிறோமே தவிர, யாரையும் நாங்கள் எதிரிகளாக பார்க்கவில்லை.

அனைவரும் தி.மு.க.வை நோக்கி வந்தால்தான் அவர்களுக்கு விளம்பரம் கிடைக்கும். தி.மு.க.வை சொல்லித்தான் பேச முடியும். தி.மு.க.தான் எதிரி என்று சொன்னால் தான் திரும்பி பார்ப்பார்கள். அதனால்தான் தி.மு.க.வை சொல்லி வருகின்றனர். இதிலிருந்தே தி.மு.க. என்பது தமிழ்நாட்டின் அசைக்க முடியாத சக்தி என்பதை தெரிந்து கொள்ளலாம்" என்று தெரிவித்தார்.