அரசியல்

தமிழக சட்டமன்ற தேர்தல்: சொந்த மாவட்டத்தில் களம் காணும் சீமான்?

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த முறை தனது சொந்த மாவட்டமான சிவகங்கையில் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக சட்டமன்ற தேர்தல்: சொந்த மாவட்டத்தில் களம் காணும் சீமான்?
Seeman
தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், "தனித்துப் போட்டி" என்ற தனது முழக்கத்தில் உறுதியாக உள்ள சீமான், மற்ற கட்சிகளுக்கு முன்னதாகவே தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். ஏற்கனவே பெரும்பாலான தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ள அவர், வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் பிரம்மாண்ட மாநாட்டில் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.

காரைக்குடியைத் தேர்வு செய்தது ஏன்?

இந்தத் தேர்தலின் முக்கியத் திருப்பமாக, சீமான் தனது சொந்த மாவட்டமான சிவகங்கையில் உள்ள காரைக்குடி தொகுதியில் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2016-ல் கடலூர் தொகுதியில் களம் கண்டு 7 சதவீத வாக்குகளையும், 2021-ல் சென்னை திருவொற்றியூரில் போட்டியிட்டு 24.3 சதவீத வாக்குகளையும் பெற்ற சீமான், இந்த முறை தென் மாவட்டங்களில் கட்சியின் செல்வாக்கை நிரூபிக்கத் திட்டமிட்டுள்ளார். வட மாவட்டங்கள் மற்றும் தலைநகருக்குப் பிறகு, தனது சொந்த மண்ணில் களம் இறங்குவது தென் தமிழக வாக்காளர்களைப் பெருமளவில் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சவாலான களம்

காரைக்குடி தொகுதி என்பது பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சி அதிக முறை வெற்றி பெற்ற ஒரு பகுதியாகும். கடந்த தேர்தலில் இங்கு பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா இரண்டாம் இடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சவாலான தொகுதியில் சீமான் களம் இறங்குவது, அந்த மாவட்ட நாம் தமிழர் கட்சித் தொண்டர்களிடையே மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சொந்த மண்ணில் போட்டியிடுவதன் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்ய முடியும் என அக்கட்சியினர் நம்புகின்றனர்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது?

கடலூர் மற்றும் திருவொற்றியூர் தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்திருந்தாலும், வாக்கு சதவீதத்தில் பெரும் வளர்ச்சியைச் சீமான் பதிவு செய்திருந்தார். அந்த நம்பிக்கையில் தற்போது காரைக்குடியைக் குறிவைத்துள்ள அவரது அதிகாரப்பூர்வ அறிவிப்பு, திருச்சியில் நடைபெற உள்ள வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.