விளையாட்டு

கால்பந்து வீரர் மெஸ்ஸியின் 70 அடி உயர சிலை திறப்பு.. கொல்கத்தாவில் ரசிகர்கள் கொண்டாட்டம்!

அர்ஜென்டினா நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸியின் பிரம்மாண்டமான 70 அடி உயரச் சிலை கொல்கத்தாவில் திறக்கப்பட்டுள்ளது.

கால்பந்து வீரர் மெஸ்ஸியின் 70 அடி உயர சிலை திறப்பு.. கொல்கத்தாவில் ரசிகர்கள் கொண்டாட்டம்!
Footballer Messi's 70-foot statue unveiled
கால்பந்து உலகின் முடிசூடா மன்னன் லியோனல் மெஸ்ஸி, இந்தியாவில் தனது 'G.O.A.T. டூர் இந்தியா 2025' பயணத்தை தொடங்கியுள்ளார். இதன் ஒரு பகுதியாக, கொல்கத்தாவில் அவருக்குப் பிரம்மாண்டமான 70 அடி உயரச் சிலை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இதனை காண வந்த ரசிகர்கள் உற்ச்சாகமாக கோஷம் எழுப்பினர்.

பிரம்மாண்ட சிலை திறப்பு

மெஸ்ஸிக்காக நிறுவப்பட்டுள்ள இந்தச் சிலை, கொல்கத்தாவின் லேக் டவுன் பகுதியில் உள்ள ஸ்ரீபூமி ஸ்போர்ட்டிங் கிளப்பில் அமைந்துள்ளது. அர்ஜென்டினா நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி, சிலை திறப்பு விழாவில் காணொளி காட்சி வாயிலாக கலந்துகொண்டு சிலையை திறந்து வைத்தார். வெண்கலத்தால் உருவாக்கப்பட்ட இந்த 70 அடி சிலை, மெஸ்ஸியின் புகழ்பெற்ற வெற்றிக் கொண்டாட்ட பாணியைச் சித்தரிக்கிறது. எட்டு முறை உயரிய பலோன் டி'ஓர் (Ballon d'Or) விருதை வென்ற மெஸ்ஸிக்கு இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் பெரிய சிலையாக இது உள்ளது குறிப்பிடத்தக்கது.

மெஸ்ஸியின் இந்தச் சுற்றுப்பயணம், கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் முதல் கட்டத்தை நிறைவு செய்த மெஸ்ஸி, அடுத்ததாக ஐதராபாத் செல்கிறார். இதையடுத்து அவர் முன்பையில் பிரபல நட்சத்திரங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ளவிருக்கிறார்.

மும்பையில் நட்சத்திர நிகழ்வுகள்

மெஸ்ஸியின் வருகையை ஒட்டி மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் ஒரு பிரம்மாண்ட நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் ஒரு சிறப்பு தொண்டுக்கான ஃபேஷன் ஷோ (Philanthropic Fashion Show) 45 நிமிடங்கள் நீடிக்கும். இதில் மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணியில் விளையாடும் சக வீரர்களான லூயிஸ் சுவாரஸ் (Luis Suárez) மற்றும் ரோட்ரிகோ டி பால் (Rodrigo De Paul) ஆகியோரும் பங்கேற்கின்றனர். இந்த முக்கிய நிகழ்வுகளுக்குப் பிறகு, கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியாவில் (CCI) பேடல் கோப்பை (Padel Cup) போட்டியும் நடைபெற உள்ளது. 15 ஆம் தேதி டெல்லிக்கு புறப்படும் அவர் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடுகிறார்.