விளையாட்டு

T20 World Cup: இந்தியாவா? இங்கிலாந்தா? இறுதிப்போட்டிக்குச் செல்லப்போவது யார்?

சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் டி20 உலகக்கோப்பை தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

T20 World Cup: இந்தியாவா? இங்கிலாந்தா? இறுதிப்போட்டிக்குச் செல்லப்போவது யார்?
IND vs ENG
கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்கிய டி20 உலகக்கோப்பை திருவிழா, தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் முதல் அரையிறுதியில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. அதனைத் தொடர்ந்து, நாளை மதியம் மும்பை வான்கடே மைதானத்தில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியுடன் மோதவுள்ளது.

அரையிறுதிக்குத் தகுதி

இந்தத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியடைந்து சற்று பின்னடைவைச் சந்தித்த இந்திய அணி, பின்னர் அதிரடியாக மீண்டு வந்தது. ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் அபாரமாக விளையாடி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. தற்போது இறுதிப் போட்டிக்குள் நுழையும் முனைப்புடன் இந்திய வீரர்கள் வான்கடே மைதானத்தில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்?

போட்டி நடைபெறும் நாளில் மழை குறுக்கிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவதால், ரசிகர்கள் சற்று கவலையடைந்துள்ளனர். இருப்பினும், ஐசிசி (ICC) இந்தப் போட்டிக்காக ஒரு 'ரிசர்வ் டே' (Reserve Day) ஒதுக்கியுள்ளது. ஒருவேளை ஆட்டம் மழையினால் தாமதமானால், வியாழக்கிழமை கூடுதலாக 90 நிமிடங்களும், வெள்ளிக்கிழமை கூடுதலாக 120 நிமிடங்களும் அவகாசம் வழங்கப்படும். எப்படியாவது குறைந்தபட்சம் 5 ஓவர்களாவது வீசப்பட்டு முடிவை எட்ட வேண்டும் என்பதில் அதிகாரிகள் உறுதியாக உள்ளனர்.

பழிவாங்குமா இங்கிலாந்து? பதிலடி கொடுக்குமா இந்தியா?

கடந்த கால வரலாற்றைப் பார்த்தால், 2022 அரையிறுதியில் இங்கிலாந்து இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. அதற்குப் பழிவாங்கும் விதமாக, 2024 அரையிறுதியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி, பின்னர் தென்னாப்பிரிக்காவை ஜெயித்து உலகக்கோப்பையை உச்சி முகர்ந்தது. அந்த உத்வேகத்தைத் தக்கவைத்துக்கொள்ள இந்தியாவும், இழந்த பெருமையை மீட்க இங்கிலாந்தும் நாளை மோதுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.