விளையாட்டு

தொடர்ந்து 3 முறை டக் அவுட்.. அபிஷேக் ஷர்மாவின் மோசமான சாதனை!

நெதர்லாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய ஓப்பனிங் வீரர் அபிஷேக் சர்மா ஒரு மோசமான சாதனையை படைத்துள்ளார்.

தொடர்ந்து 3 முறை டக் அவுட்.. அபிஷேக் ஷர்மாவின் மோசமான சாதனை!
Abishek Sharma
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது வெற்றிகரமான பயணத்தைத் தொடர்ந்தாலும், தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளது. நெதர்லாந்து அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் அவர் சந்தித்த டக் அவுட், கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மோசமான சாதனையாகப் பதிவாகியுள்ளது.

அபிஷேக் சர்மா டக் அவுட்

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில், இந்திய அணி தனது 4-வது வெற்றியைப் பதிவு செய்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி வெற்றி பெற்றாலும், அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

வரலாற்றில் முதன்முறை: ஒரு தேவையற்ற சாதனை

கடந்த இரண்டு போட்டிகளிலும் ரன் எடுக்காமல் வெளியேறிய அபிஷேக் சர்மா, இந்தப் போட்டியிலும் 'டக் அவுட்' ஆனதன் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றிலேயே தொடர்ச்சியாக மூன்று முறை பூஜ்ஜியத்தில் ஆட்டமிழந்த முதல் வீரர் என்ற மோசமான சாதனையைப் படைத்துள்ளார். இந்திய வீரர்கள் மட்டுமன்றி, உலக அளவில் இதுவரை எந்தவொரு வீரரும் உலகக் கோப்பை போன்ற முக்கியத் தொடரில் இத்தகைய சரிவைச் சந்தித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சறுக்கலில் நம்பர் 1 பேட்ஸ்மேன்

ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அபிஷேக் சர்மா, கடந்த 7 சர்வதேசப் போட்டிகளில் 5 முறை டக் அவுட் ஆகியுள்ளார். அவரது இந்தத் தொடர் சரிவு இந்திய அணிக்கு பின்னடைவாகக் கருதப்பட்டாலும், அதற்கான பின்னணி காரணமாக அவரது உடல்நிலை சுட்டிக்காட்டப்படுகிறது. உலகக் கோப்பை தொடர் தொடங்கும் முன்பிருந்தே அவர் கடுமையான வயிற்றுப் புண் பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ள நிலையில், தற்போது விளையாடி வருகிறார்.

மீண்டு வருவார் என எதிர்பார்ப்பு

உடல்நலக் குறைவிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் அபிஷேக் சர்மா, வரும் 22 ஆம் தேதி நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 ஆட்டத்தில் மீண்டும் தனது பழைய அதிரடி ஆட்டத்திற்குத் திரும்புவார் என்று அணி நிர்வாகமும் ரசிகர்களும் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.