விளையாட்டு

தொடர் தோல்விகள்.. சிஎஸ்கே-விற்குப் புத்துயிர் கிடைக்குமா?

தொடர் தோல்விகளால் தவித்து வரும் சிஎஸ்கே ரசிகர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக, தோனி மற்றும் டேவால்ட் பிரேவிஸ் ஆகியோர் அடுத்த போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தொடர் தோல்விகள்.. சிஎஸ்கே-விற்குப் புத்துயிர் கிடைக்குமா?
CSK
ஐபிஎல் 2026 தொடரில் தொடர் தோல்விகளால் தவித்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக, கேப்டன் தோனி மற்றும் அதிரடி வீரர் டேவால்ட் பிரேவிஸ் ஆகியோர் அடுத்த போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாடிய முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சிஎஸ்கே அணிக்குத் தோனியின் வருகை மிக அவசியமாகியுள்ளது. கணுக்கால் தசைப்பிடிப்பு காரணமாக இதுவரை ஓய்வில் இருந்த 44 வயதான தோனிக்கு, இன்னும் சில நாட்களில் உடற்தகுதி பரிசோதனை நடத்தப்பட உள்ளது. வலைப்பயிற்சியில் அவர் எவ்வித சிரமமுமின்றி பேட்டிங் செய்தாலும், அவரை அவசரப்படுத்தாமல் நிதானமாகத் தயார் செய்ய நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் மாற்றம்?

வரும் சனிக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் தோனி உடற்தகுதி பெற்றுத் திரும்பினால், அது அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும். தோனி இல்லாத நிலையில் ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளிடம் தோற்றுள்ள சிஎஸ்கே, இந்த சீசனில் இதுவரை ஒரு வெற்றியைக்கூடப் பெறாத மூன்று அணிகளில் ஒன்றாகப் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

பயிற்சியாளர் பிளெமிங் சொன்ன குட் நியூஸ்

தோனி மட்டுமின்றி, பக்கவாட்டு தசைப்பிடிப்பு காரணமாக முதல் மூன்று போட்டிகளில் விளையாடாத தென் ஆப்பிரிக்க இளம் வீரர் டேவால்ட் பிரேவிஸும் அடுத்த போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்துப் பேசிய தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், "அடுத்த ஆட்டத்திற்கு இன்னும் ஐந்து நாட்கள் இடைவெளி உள்ளதால், பிரேவிஸ் தயாராகிவிடுவார் என்று நம்புகிறோம். நாங்கள் அவரை எச்சரிக்கையாகக் கவனித்து வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.