விளையாட்டு

T20 World Cup: பாகிஸ்தான் தோல்வி.. கிரிக்கெட் வாரியத் தலைவரை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்!

தகுதியற்றவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தால் விளைவுகள் இப்படிதான் இருக்கும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரை முன்னாள் வீரர் சோயிப் அக்தர் விமர்சித்துள்ளார்.

T20 World Cup: பாகிஸ்தான் தோல்வி.. கிரிக்கெட் வாரியத் தலைவரை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்!
shoaib akhtar and mohsin
நேற்று நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உலக கோப்பை டி20 ஆட்டத்தில், 176 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி வெறும் 114 ரன்களுக்குச் சுருண்டது. 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியடைந்த விதம், பாகிஸ்தான் முன்னாள் வீரர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நிர்வாகத் திறமை குறித்த விமர்சனம்

இந்தத் தோல்வி குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்த பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரை நேரடியாக விமர்சித்தார். "கிரிக்கெட் என்றால் என்னவென்றே தெரியாத ஒருவரைத் தலைவராக்கினால் அணியின் செயல்பாடு இப்படித்தான் இருக்கும்" என்று அவர் காட்டமாகத் தெரிவித்தார். திறமையற்ற மற்றும் அறியாமை கொண்ட ஒருவரிடம் மிகப்பாரிய பொறுப்புகளை ஒப்படைப்பது மிகப்பெரிய குற்றம் என்றும், அது போன்ற முடிவுகள் குழப்பத்திற்கும் சேதத்திற்குமே வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வீரர்களின் செயல்பாடு மற்றும் தரம்

அணித் தேர்வை விமர்சித்த அக்தர், ஊடகங்களால் "சூப்பர் ஸ்டார்" என அடையாளப்படுத்தப்படும் வீரர்கள் களத்தில் ஒரு ஆட்டத்தைக் கூட வென்று கொடுப்பதில்லை எனச் சாடினார். பத்து ஓவர்கள் கூடத் தாக்குப் பிடிக்க முடியாத வீரர்களை நட்சத்திர வீரர்களாகக் கொண்டாடுவதில் அர்த்தமில்லை என்று குறிப்பிட்ட அவர், இந்தியா கிரிக்கெட்டில் மிகவும் முன்னேறியுள்ள நிலையில், பாகிஸ்தான் புள்ளிப்பட்டியலில் மிகவும் பின்தங்கியிருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

அரசியல் கலந்த நிர்வாகம்?

தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருக்கும் மொஹ்சின் நக்வி, அந்நாட்டின் உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார். கிரிக்கெட் அனுபவம் இல்லாத அரசியல் பிரமுகர்கள் வாரியத்தின் உச்சப்பட்ச அதிகாரத்தில் இருப்பதே இதுபோன்ற தோல்விகளுக்குக் காரணம் என அக்தர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும், "நமீபியா போன்ற அணிகளை வென்று பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறும்; எனது ஆதரவு எப்போதும் அணிக்கு உண்டு" என நம்பிக்கை தெரிவித்தார்.