விளையாட்டு

விராட் கோலி சாதனை முடியடிப்பு: பெஞ்சில் அமரவைக்கப்பட்ட சஞ்சு சாம்சனின் மாஸ் கம்பேக்!

2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.

விராட் கோலி சாதனை முடியடிப்பு: பெஞ்சில் அமரவைக்கப்பட்ட சஞ்சு சாம்சனின் மாஸ் கம்பேக்!
Sanju samson
நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் 46 பந்துகளில் 89 ரன்கள் குவித்து அசத்திய சஞ்சு சாம்சன், இந்தத் தொடர் முழுவதும் சேர்த்து மொத்தம் 321 ரன்களைக் குவித்துள்ளார். இதன் மூலம், 2014-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி படைத்திருந்த 319 ரன்கள் என்ற சாதனையை அவர் கடந்துள்ளார். வெறும் ஐந்து இன்னிங்ஸ்களிலேயே 199.37 என்ற அபாரமான ஸ்ட்ரைக் ரேட்டுடன் இந்த ரன்களை அவர் எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சிக்சர்களில் உலக சாதனை

ரன்கள் குவிப்பதில் மட்டுமல்லாது, சிக்சர்களைப் பறக்கவிடுவதிலும் சஞ்சு சாம்சன் புதிய உலக சாதனை படைத்துள்ளார். இந்தத் தொடரில் மொத்தம் 24 சிக்சர்களை விளாசியுள்ள அவர், ஒரு டி20 உலகக் கோப்பைத் தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இறுதிப் போட்டியில் மட்டும் 8 சிக்சர்களை அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இதற்கு முன்னதாக இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியிலேயே ரோஹித் சர்மாவின் சாதனையை அவர் முறியடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கிடைத்த வாய்ப்பை வசப்படுத்திய சஞ்சு

தொடரின் ஆரம்பக்கட்ட லீக் ஆட்டங்களில் சாம்சனுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அபிஷேக் சர்மாவுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு மற்றும் இஷான் கிஷனின் பேட்டிங் வரிசை மாற்றம் போன்ற சூழல்களால் கிடைத்த வாய்ப்பை சாம்சன் மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டார். குறிப்பாக, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 97* ரன்களும், இங்கிலாந்துக்கு எதிராக 89 ரன்களும் குவித்து அணியின் வெற்றிக்குத் தூணாக விளங்கினார்.

இறுதிப் போட்டியின் அதிரடி பார்ட்னர்ஷிப்

இறுதிப் போட்டியில் தொடக்க வீரராகக் களமிறங்கிய சாம்சன், அபிஷேக் சர்மாவுடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 98 ரன்களும், பின்னர் இஷான் கிஷனுடன் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 105 ரன்களும் சேர்த்து இந்திய அணியை வலுவான நிலைக்குக் கொண்டு சென்றார். இந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் சாஹிப்சாதா ஃபர்ஹான் (383 ரன்கள்) முதலிடத்தில் இருந்தாலும், சாம்சனின் ஸ்ட்ரைக் ரேட் மற்றும் சிக்சர் வேட்டை அவரைத் தனித்துவமான வீரராக மாற்றியுள்ளது.