தமிழ்நாடு

"லக்கி பாஸ்கர்" படபாணியில் கொள்ளையடித்த வங்கி மேலாளர்.. வயதானவர்களின் வைப்பு நிதியை குறி வைத்து மோசடி!

லக்கி பாஸ்கர் படத்தில் யாரிடமும் சிக்காமல் கோடிக்கணக்கான ரூபாய் வங்கி பணத்தை மோசடி செய்து சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து, வங்கி மேலாளர் நூற்றுக்கணக்கான கோடி ரூபாயுடன் வெளிநாட்டில் சொகுசாக வாழ்ந்தது போன்று, சென்னை அண்ணா நகரை சேர்ந்த இண்டஸ்இண்ட் வங்கி கிளை மேலாளர் லக்கி மஞ்சுளா கைவரிசை காட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மஞ்சுளாவிற்கு உதவிய நாகேஷ்வரன் மற்றும் ஆறுமுக குமார்
துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி அனைவராலும் ரசிக்கப்பட்ட திரைப்படம் லக்கி பாஸ்கர். பங்குச்சந்தையில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடி செய்த ஹர்ஷ்த் மேத்தாவிற்கு உதவிய வங்கி மேலாளர், திட்டமிட்டு தானும் மோசடி செய்து பணத்தை கொள்ளை அடித்து சிபிஐ அதிகாரிகளிடம் சிக்காமல் அமெரிக்காவிற்கு சென்று தலைமறைவான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு லக்கி பாஸ்கர் திரைப்படம் எடுக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.

பிரபல வங்கியான இண்டஸ்இண்ட் வங்கியின் அண்ணா நகர் வங்கி கிளையில் கடந்த 2022 இல் இருந்து அமேரிக்காவில் வசித்து வரும் 77 வயது மருத்துவர் விஜய் ஜானகிராமன் மற்றும் மல்லிகா ஜானகிராமன் பெயரில் வைப்பு நிதியாக 4 கோடியே 36 லடச்த்து 70 ஆயிரம் ரூபாய் பணத்தை வைத்துள்ளார். இந்தாண்டு கடந்த ஜனவரி மாதம் வைப்பு நிதி குறித்து ஆய்வு செய்த போது வைப்பு நிதி காலம் முடிவதற்கு முன்பாகவே முடித்து வைக்கப்பட்டு பணம் வேறு வங்கி கணக்குகளில் பரிவர்த்தனை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதையடுத்து தங்களது வைப்பு நிதியை மோசடி செய்த வங்கி அதிகாரிகள் மற்றும் வங்கி நிர்வாக இயக்குனர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மருத்துவர் புகார் அளித்துள்ளார். குறிப்பாக அவர்கள் அமெரிக்காவில் இருக்கிற காரணத்தினால் அவரது நண்பர் மூலம் இந்த புகார் ஆனது அளிக்கப்பட்டு, அதற்குண்டான ஆதாரத்தை சமர்ப்பித்துள்ளார். அதன் அடிப்படையில் இந்த இண்டஸ்இண்ட் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் இந்த மோசடி நடந்த காலகட்டத்தில் உள்ள அண்ணா நகர் வங்கி கிளை மேலாளர் ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்ற பிரிவின் மோசடி பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது.

மத்திய குற்ற பிரிவின் முதற்கட்ட விசாரணையில் ,குறிப்பாக Alamu Memorial Trust-ல் 3 வைப்பு நிதி என மொத்தம் Rs.2,64,00,000/-ம், மற்றொரு வங்கி கணக்கில் 6 வைப்பு நிதியும் 1,40,70,000/-ம் செலுத்தியுள்ளனர். மேற்கண்ட FD கணக்குகள் அனைத்தும் முன்கூட்டியே முதிர்ச்சி அடைந்து விட்டதாக கூறி மோசடி செய்து வங்கி மேலாளர் உட்பட அவரது கூட்டாளிகள் ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்தது. 2022 ஆம் ஆண்டுக்கு முன்னதாக இருந்த வங்கி மேலாளர் மஞ்சுளா தியாகராஜன் என்பவர் தனது நண்பர்களோடு சேர்ந்து இந்த மோசடியை அரங்கேற்றியதாக போலீசார் கண்டுபிடித்தனர்.

விஜய் ஜானகிராமன் மற்றும் மல்லிகா ஜானகிராமன் வைப்பு நிதி முன்கூட்டியே முடித்து தொகையை கேட்டது போன்று போலியாக கடிதத்தை உருவாக்கி, காசோலைகளிலும் போலியாக கையெழுத்திட்டு வங்கி மேலாளர் மஞ்சுளா கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது. அவ்வாறு வைப்பு நிதியை மோசடி செய்து தனது நண்பர்கள் வங்கிக் கணக்குகளில் மாற்றி பணத்தை கொள்ளை அடித்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வகையில் மேலாளர் இருந்த மஞ்சுளா தியாகராஜன் தனது ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நண்பர்கள் நாகேஸ்வரன் மற்றும் அவரது உறவினர் ஆறுமுகம் ஆகியோர் வங்கிக் கணக்குகளில் பணத்தை மாற்றி அபகரித்ததை போலீசார் விசாரணையில் கண்டுபிடித்தனர்.

அந்த அடிப்படையில் நாகேஷ்வரன் மற்றும் ஆறுமுக குமார் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து நாகேஷ்வரன் வங்கி கணக்கு, அவரது குடும்ப உறுப்பினர்கள் வங்கி கணக்குகளுக்கு, 72 லட்சம் ரூபாய் மோசடியாக பணத்தை மாற்றி அபகரித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆறுமுககுமாரின் வங்கி கணக்கிற்கு, 1 கோடியே 64 லடசத்து 14 ஆயிரத்து 250 ரூபாயை மோசடியாக பணபரிமாற்றம் செய்தது கண்டுபிடிக்கப்படது. பணத்தை அபகரிக்க உதவிய குற்றத்திற்காக இந்த இருவரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த மோசடியை அரங்கேற்றிய மஞ்சுளா தியாகராஜன் 65 வயது பெண்மணி ஆவார். கடந்த 2022 ஆம் ஆண்டுற்கு முன்பே இதுபோன்று பல வைப்பு நிதிகளை மோசடி செய்து பணத்தை கொள்ளை அடித்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. குறிப்பாக லக்கி பாஸ்கர் படத்தில் உள்ளது போன்று திட்டமிட்டு வங்கிகளில் மோசடி செய்து பணத்தை கொள்ளை அடித்து விட்டு, வெளிநாட்டிற்கு தப்பிச்செல்ல திட்டமிட்டு இருந்தது தெரியவந்துள்ளது. இப்படி கொள்ளை அடித்துச் செல்வதற்காகவே பலரையும் இந்த வங்கியில் வைப்பு நிதியில் முதலீடு செய்யுமாறு ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்து அந்த பணத்தை எல்லாம் லக்கி மஞ்சுளா தியாகராஜன் கொள்ளை அடித்துச் சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அவர் திட்டமிட்டபடி வைப்பு நிதிகளை கொள்ளையடித்த பிறகு, ஓய்வு பெற்ற உடனேயே கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை எடுத்துக்கொண்டு வெளிநாட்டில் தப்பிச் சென்று தலைமறைவாக இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடைசியாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பிரான்ஸ் நாட்டில் மஞ்சுளா தியாகராஜன் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.இதனை அடுத்து தலைமறைவான இண்டஸ் இண்ட் மேலாளராக இருந்த மஞ்சுளா தியாகராஜனுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மோசடியில் தொடர்புடைய மற்ற நபர்களையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். வங்கி வாடிக்கையாளர்களே கண்டுபிடிக்க முடியாத வகையில் நீண்ட ஆண்டு காலமாக இருக்கும் வைப்பு நிதிகளை மோசடி செய்து கொள்ளையடித்த பெண் மேலாளர் மஞ்சுளா தியாகராஜன் , சிக்கி விடக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு கொள்ளையடித்த பணத்துடன் வெளிநாட்டில் தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.