தமிழ்நாடு

கோவையில் வீல் சேர் பிரச்சனைக்குத் தீர்வு.. சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவு!

கோவையில் தனது மகனால் தோளில் தாங்கியபடி அழைத்துச் செல்லப்பட்ட முதியவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, ₹1.3 லட்சம் மதிப்பில் 10 வீல் சேர்கள் மற்றும் 10 ஸ்ட்ரெச்சர்கள் வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கோவையில் வீல் சேர் பிரச்சனைக்குத் தீர்வு.. சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவு!
கோவையில் வீல் சேர் பிரச்சனைக்குத் தீர்வு.. சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவு!
கடந்த இரு தினங்களுக்கு முன்பு, 85 வயது முதியவர் ஒருவர், கால் முறிவுடன் மருத்துவமனைக்கு வந்த நிலையில், வீல் சேர் கிடைக்காததால், அவரது மகன் அவரைத் தோளில் தாங்கியபடி இழுத்துச் சென்ற வீடியோ வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மருத்துவமனை நிர்வாகத்தின் விளக்கம்

இது குறித்து விளக்கம் அளித்த மருத்துவமனை டீன் கீதாஞ்சலி, மருத்துவமனையில் போதுமான அளவு வீல் சேர்கள் மற்றும் ஸ்ட்ரெச்சர்கள் உள்ளன. நோயாளி வந்தபோது, ஊழியர்கள் மற்றொரு நோயாளியை அழைத்துச் சென்றதால், 15 நிமிடங்கள் மட்டுமே காத்திருந்தார். ஆனால், அது 2 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்ததாகத் தவறான தகவல் பரப்பப்பட்டது" என்று தெரிவித்தார்.

அமைச்சரின் உத்தரவு

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவின் பேரில், கோவை அரசு மருத்துவமனைக்குக் கூடுதலாக 10 வீல் சேர்கள் மற்றும் 10 ஸ்ட்ரெச்சர்கள் வாங்குவதற்காக ₹1,30,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கொள்முதல் ஆணை இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதிதாக ஆர்டர் செய்யப்பட்ட இந்த உபகரணங்கள், இன்று மாலை அல்லது நாளைக்குள் வந்து சேரும் எனவும், நாளை முதல் அவை பயன்பாட்டுக்கு வரும் எனவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே போதுமான அளவு உபகரணங்கள் இருந்தாலும், நோயாளிகளின் சிரமத்தைத் தவிர்க்கக் கூடுதலாக இவை வாங்கப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. ஊழியர்கள் அனைவரும் நோயாளிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.