தமிழ்நாடு

“ரொம்ப SORRY மா..” அஜித்குமார் தாயாரிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர்..!

போலீசார் விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் தாயாரிடம் முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கோரினார்.

“ரொம்ப SORRY மா..” அஜித்குமார் தாயாரிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர்..!
CM Stalin apologized to Ajith Kumar's mother
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக காவலாளியாக பணியாற்றிய இளைஞர் அஜித்குமார் என்பவர் 10 பவுன் நகை திருடியதாக பக்தர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், போலீசார் தாக்கியதால் உயிரிழந்தார்.

இச்சம்பவம் தமிழக அரசியலால் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கில் தொடர்புடைய 5 காவலர்கள் கொலை வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களை 15 நாள் நீதிமன்றக்காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும், சிவகங்கை போலீஸ் எஸ்பி ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சந்தீஷ் கூடுதல் பொறுப்பாக சிவகங்கை மாவட்ட போலீஸ் எஸ்பியாக செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்குமார் குடும்பத்தினருடன் உரையாடிய முதல்வர்:

இந்தநிலையில், அஜித்குமார் குடும்பத்தாரிடம் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி வழியாக தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தார். அப்போது அமைச்சர் பெரியகருப்பன் அஜித்குமார் வீட்டில் உடனிருந்தார். இந்த தொலைபேசி உரையாடலின்போது, அஜித்குமாரின் குடும்பத்திடம் ஆழ்ந்த இரங்கலை முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். தொலைபேசி வாயிலாக உரையாடிய பதிவுகளை முதலமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அஜித்குமார் தாயாரிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர்:

அந்த காணொளியில், அஜித்குமாரின் தாயாரிடம் தொலைபேசியில் உரையாடிய முதலமைச்சர் ஸ்டாலின், “ரொம்ப சாரி மா தைரியமாக இருங்கள். இந்த சம்பவம் தொடர்பாக தீவிர நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன். உங்களுக்கு வேண்டிய உதவியை நான் வழங்க அறிவுறுத்திக்கிறேன்” என்று தெரிவித்தார்.

மேலும் அவர், “திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு. கடமை தவறிக் குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த அரசு தண்டனை பெற்றுத் தரும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலாக நிற்கும்” என்று தெரிவித்துள்ளார்.