தமிழ்நாடு

ஓரினச்சேர்க்கைக்கு அழைத்தாரா? புரோட்டா மாஸ்டர் கொலையில் திடுக்கிடும் தகவல்

கோவையில் புரோட்டா மாஸ்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த ஹோட்டல் தொழிலாளி மதுரையில் கைது செய்யப்பட்டார். ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததால் அடித்துக் கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓரினச்சேர்க்கைக்கு அழைத்தாரா? புரோட்டா மாஸ்டர் கொலையில் திடுக்கிடும் தகவல்
Hotel Employee Confesses to Killing Roommate Homosexual Advance Led to Fatal Attack
கோவை கரும்புக்கடை அருகே உள்ள பாத்திமா நகரில் வசித்து வந்தவர் நவீன், புரோட்டா மாஸ்டர். இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வந்தார். அதே ஹோட்டலில் தயாநிதி என்பவரும் வேலை பார்த்து வந்தார். இதனால் நவீனும், தயாநிதியும் ஹோட்டலுக்கு அருகிலேயே தங்கி இருந்தனர். இந்நிலையில், கடந்த 22 ஆம் தேதி நவீன் தனது அறையில் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தார். அவருடன் தங்கியிருந்த தயாநிதி மாயமாகி இருந்தார். இதுகுறித்து கரும்புக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்பொழுது, நவீனை அவருடன் தங்கியிருந்த தயாநிதி, கேஸ் ஸ்டவ்வில் உள்ள இரும்பு பர்னரை வைத்து தலையில் அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. மேலும், அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. இதை அடுத்து, காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளியைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், தனிப்படை போலீசார் கோவையில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்களிலும் உள்ள கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்தபோது, சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஏ.டி.எம் மையத்தில் தயாநிதி பணத்தை எடுத்துவிட்டு மதுரை பேருந்தில் ஏறிச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மதுரை சென்ற போலீசார் அவரை கண்காணித்து வந்தனர். மேலும், மதுரையிலும் கண்காணிப்புக் கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. அப்பொழுது, அங்கு பேருந்து நிலையத்தில் தயாநிதி சுற்றித் திரிவது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் விரைந்து சென்று நேற்று காலை தயாநிதியை மடக்கி கைது செய்தனர்.

தொடர்ந்து காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:

தயாநிதியின் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உள்ள ஆவாரம்பட்டி கிராமம். மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், தயாநிதியுடன் தங்கியிருந்த நவீன் தினமும் ஓரினச்சேர்க்கைக்கு இணங்குமாறு வற்புறுத்தி வந்ததாகவும், சம்பவத்தன்றும் அவரை வற்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் கேஸ் ஸ்டவ் பர்னர் கம்பியை வைத்து அடித்ததாகவும், இதில் அவர் இறந்துவிட்டதால், பயந்துபோய் தனது செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு மதுரைக்குச் சென்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக கோவையில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த புரோட்டா மாஸ்டர் கொலை வழக்கில் கொலையாளி கைதாகியுள்ள நிலையில் அவர் தெரிவித்துள்ள கொலைக்கான காரணம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.